Wednesday 1 June 2011

மண்ணுக்கு பிரிவினை கூடாது என்போர், மனிதர்களைப் பிரிவினை செய்யலாமா?

பல்லடத்தில் நடந்த நாத்திகர் விழாவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை:

இன்று காலையிலிருந்து நடந்த நிகழ்ச்சி நாத்திகர் விழா என்ற பெயரால் ஒரு மாநாட்டை கூட்டி நாத்திக கருத்துகளை முன்னிறுத்தி மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு அல்லது ஏற்கனவே இருக்கிற கருத்துகளை மேலும் தூண்டி விடுவதற்கும் அதை துளிர்த்து விடுவதற்குமாக இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்திக்கொண்டிருக்கிறோம் என்றாலும் இதெல்லாம் ஏற்கனவே மக்களுக்கு தெளிவாக தெரிந்த செய்திகள் தான். மாணவப் பருவத்தில் பள்ளியில் படிக்கின்ற பிள்ளைகளுக்கு அறிவியல் என்று ஊட்டப்படுகிறது. அறிவியல் பாடம் சொல்லி தந்த செய்திகள் அதிலே நிபுலா தியரி என்று சொல்லுகிறார்கள். பிக்பேங்க் தியரி என்று சொல்லுகிறார்கள். உலகம் எப்படி உண்டானது என்பதற்கு உலகம் கடவுளால் படைக்கப்பட்டது பொய் என்று அறிவியல் பாடம் சொல்லிவிட்டது மாணவப் பருவத்தில்.

டார்வின் தியரியை படிக்கிறார்கள் எப்படி உயிர்கள் உருமலர்ச்சி பெற்றது என்று. ஓர் அணு அமீபாவாக இருந்து மனிதனாக உரு மலர்ச்சிப் பெற்ற முழு வரலாற்றை டார்வின்  தத்துவம் சொல்லி வருகிறது. ஆக மனிதன் படைக்கப்படவில்லை. மனிதன் உரு மலர்ந்தான் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை அறிவியல் பாடம் சொல்லி விடுகிறது. எல்லாம் கடவுள் படைக்கவில்லை என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை அறிவியல்பாடம் சொல்கிறது. ஆனால் அறிவியல் என்பது அறிவியல் அறிவாக உள்ளது. அறிவியல் மனப்பான்மையாக மாற வேண்டும் என்பதே நம் நோக்கம்.
 அறிவியல் அறிவு - Scientific Knowledge மட்டும் போதாது அறிவியல் மனப்பான்மை -  Scientific Mentality வேண்டும். அப்படி அறிவியல் மனப்பான்மை இருந்தால் தான் எதையும் அறிவியல் பார்வையில் அணுக முடியும் - Scientific approach அறிவியல் அணுகுமுறை இருந்தால் தானாகவே அறிவியல் கண்டுபிடிப்புகள் – Scientific Inventions உருவாகும்.

 அறிவியல் மனப்பான்மை இல்லாததால்தான் சரஸ்வதிக்கு வருடம் தவறாமல் பூஜை நடத்தியும் காகிதத்தை மிதித்தாலும் கண்ணில் ஒற்றிக் கும்பிடும் நமது நாடு தாழ்ந்து கிடக்க காகிதத்தில் மலம் துடைக்கும் ஐரோப்பியர்கள் மேலை நாட்டார்கள் வளர்ந்து நிற்கிறார்கள்.
 அறிவியலை வயிற்றுக்காக படிப்பதற்கு மாறாக அறி வியலை மூளைக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும். அதை செயல்படுத்த வேண்டும் என்று கேட்பதும், அப்படி செயல்படுத்த வேண்டும் என மக்களிடம் வேண்டுகோள் வைத்து அதற்கு துணையான நிகழ்ச்சிகளை நிகழ்த்தி காட்டினார்கள். அருமைத் தோழர்கள் அலகு குத்தி தொங்கிய வண்ணம் காட்டினார்கள். இராட்டின காவடி என்று அலகு குத்தி தோழர் சட்ட கல்லூரி மாணவர் பன்னீர்செல்வம், கோவை மாநகர செயலாளர்கோபால், பல்லடத்தைச் சேர்ந்த குமார் கூட அலகு குத்தி வந்ததை நீங்கள் பார்த்தீர்கள். உள்ளூர் தோழர்களைப் பார்த்தீர்கள்.

 பல பேர் வந்தார்கள். காரணம் இதன் மூலம் செயல் விளக்கமாக செய்ய வேண்டும் என்பதும் கூடுதல் முயற்சி. இப்படிப்பட்ட செயல்களில் கடவுள் மறுப்பைப் பற்றி ஏன் கடவுள் இல்லை, எப்படி இல்லை என்று விளக்குகிறார்கள். முழக்கமிட்டபோது கூட சிலருக்கு வருத்தமாக இருந் திருக்கும். கடவுளை கற்பித்தவன் முட்டாள் என்கிறார்கள். பரப்பியவனை அயோக்கியன் என்கிறார்கள். வணங்கு கிறவனை காட்டுமிராண்டி என்று சொல்கிறார்கள். வீதியில் போகிறவனை பார்த்து திட்டுவதுபோல அல்ல.

இதனால் வருத்தமுற்ற பக்தர்கள் பெரியாரிடமே எதிர்ப்பைக் காட்டினார்கள். சீர்காழியில் பெரியார் பேசவிருந்த மேடைக்கு முன்னால் பெரிய பலகையை வைத்தார்கள். கடவுளை கற்பித்தவன் புத்திசாலி. ஏன்னா நாம் முட்டாளுனு சொல்றோம்; கடவுளை பரப்பியவன் பண்பாளன். வணங்குகிறவன் வாழ்வான் என்று எழுதி வைத்தார்கள். பெரியார் வந்து பார்க்க வேண்டுமாம், எழுதி வைத்தார்கள்; பெரியார் பார்த்தார்.

 கடவுளை கற்பித்தவன் புத்திசாலி என்று எழுதி வைத்திருக்கிறார்கள். நான் கடவுளை உண்டாக்கியவன் முட்டாள் என்று சொல்லுகிறேன். இரண்டு பேருக்கும் சின்ன வேறுபாடுதான் இருக்கிறது. இரண்டு பேரும் கடவுள் உண்டாக்கப்பட்டது என்பதை ஒத்துக் கொள் கிறோம். அவன் முட்டாளா புத்திசாலியா என்பதே இப்ப சண்டை வேறு ஒன்றுமில்லை, என்றார் பெரியார்.

கடவுள் உண்மையாக இல்லை. இயற்கையாக இல்லை. பெரியார் மூன்று கேள்வி கேட்பார். கடவுள் Nature -, Invention-, Creation -ஆ இதில் எது என்று கேட்டார். அதாவது கடவுள் இயல்பாக இருக்கிறதா, கண்டு பிடிக்கப்பட்டதா, உண்டாக்கப்பட்டதா, சொல்லு நீ.... நான் கடவுள் உண்டாக்கப்பட்டது, உண்டாக்கியவன் முட்டாள் தனமாக சரியான செய்திகளை சொல்லாமல் உண்டாக்கி வைத்து போய்விட்டான் என்று சொல்கிறேன். நீ உண்டாக்கியவன் புத்திசாலி என்று சொல்கிறாய். ஆனா இரண்டு பேரும் ஒன்றை ஒத்துக் கொள்கிறோம். கடவுள் இயற்கை அல்ல, உண்டாக்கப்பட்டது என்று பெரியார் சொன்னார். அதைப்போல உண்டாக்கப்பட்ட கடவுள் நம்முடைய அறியாமையை, ஏன்னா கடவுளுக்கு எது அடிப்படை என்றால் அறியாமையும் மலைப்பும்தான். அறியாமையே நமக்கு தெரியாத பொருளுக்கெல்லாம் கடவுள் என்று விளக்கம் சொல்கிறது.

5 ஆம் வகுப்பு மாணவனிடம் போய் 2-ம் 2-ம் எவ்வளவு என்றால் சொல்வான். 5-ம் 5-ம் எவ்வளவு என்றால் சொல்ல முடியும். இல்ல 5-ம் 5-ம் பெருக்கினால் எவ்வளவு என்றும் சொல்வான். அவனிடம் போய் 3284-ம் 8738-ம் எவ்வளவு என்றால்சொல்ல தெரியாது. அல்லது கொஞ்சம் நேரம் வேண்டும். அவன் தெரியவில்லை என்றால், ஆசிரியர் சரி அடுத்த முறை முயற்சி செய்து பார் என்று சொல்வார். கடவுள் என்று சொன்னால் ஆசிரியர் அனுமதிக்க மாட்டார். ஆனால், சமுதாயம் அப்படிப்பட்ட போக்கை அனுமதித்துக் கொண்டிருக்கிறது. எதெல்லாம் தெரியவில்லையோ அதையெல்லாம் கடவுள் என்கிறான். அணுவை பிளந்தால் புரோட்டான், நியூட்டான் அதுக்கப்புறம் தெரியலைனு நாம சொல்வோம். அவன் கடவுள் என்று சொல்வான். பக்தனுக்கும் நாத்திகனுக்கும் உள்ள வேறுபாடு அங்கே தான் இருக்கிறது.

அந்த கட்டடத்துக்கு அந்தப் பக்கம் என்னவென்று தெரியாது என்று சொல்கிறோம் போய் பார்த்தா தெரியப் போகுது. மலைக்கு அந்தப் பக்கம் என்னவென்று தெரியாது போய் பார்த்தால் தெரியும். நிலவில் என்ன இருக்கிறது அப்ப தெரியாது போய் பார்த்தோம் தெரிந்து விட்டது. அதற்கு மேல் போக போகத் தெரியும், தெரியாததை தெரியாது என்று சொல்பவன் நாத்திகன். தெரியாததை கடவுள் என்று சொல்பவன் ஆத்திகன் அவ்வளவுதான் வேறுபாடு. நாங்கள் தெரியாததை தெரியாது என்று சொல்லுங்கள் நாணயமாவது மிஞ்சும். நம்மை வேண்டுமானால் முட்டாள் தெரியாதவன் என்று அவன் சொல்லிவிட்டுப் போகட்டும். நாணயமானவன் என்று சமுதாயம் ஒத்துக் கொள்ளும்.

நீங்கள் சொல்லுகிற பதில், கடவுள் என்கிற பதில் இரண்டையும் ஏற்றுக்கொள்ளாது. அதைத்தான் நாங்கள் சொல்லுகிறோம். இப்படி பல பேரால் மறுக்கப்பட்டிருக்கிற கடவுளை, யார் யார் மறுத்தார்கள் என்றெல்லாம் காலையில் சொன்னார்கள். கடவுள் என்பது ஒன்று அறிவுக்கு புறம்பாக இருக்கிறது. வேண்டாம் என்று சொல்கிறோம். இன் னொன்று தன்னம்பிக்கைக்கு எதிராக உள்ளது. கடவுள் நம்பிக்கையை விட்டு விடுங்கள் என்று சொல்கிறோம். ஆனால் நாம் கடவுள் செய்யும் என நம்பிக் கொண்டு அமைதியாக இருந்து வருகிறோம். கடவுள் பார்த்துக் கொள்வார் என்று நாம் விட்டுவிடுகிறோம்,தோல்வியில் முடிகிறது.

அங்கிருந்து இசுலாமியர்கள் படையெடுத்து வந்தபோது இங்கு நம்ம அரசருக்கு ராஜகுரு அறிவுரை சொன்னார். அரசன் வைணவத்தை சேர்ந்தவன். நீ ஒன்றும் செய்யாதே எல்லையில் கொண்டு போய் துளசியை விரித்து விட்டால் போதும் என்றார்கள். துளசி தழையை பூஜை செய்து போட்டால் முஸ்லீமின் குதிரை இந்தப் பக்கம் வராது என்று சொன்னான். துளசி இலைகளைக் கொண்டு போய் தூவி விட்டான் குதிரைகள் அவற்றை தின்னுட்டு இந்தப் பக்கம் வந்துவிட்டது. சண்டை போடாம ஆட்சியை புடிச்சிட்டு போயிட்டான்.

நம்ம தமிழ்நாட்டில் பல ஆட்சிகள் அப்படித்தான் போய்விட்டது. ஏராளமான உதாரணங்களை சொல்ல முடியும். இங்கிலாந்தில் ஆங்கிலேய தளபதி ஒருவன் இருந்தான். நெல்சன் என்று பெரிய கப்பல் படை தளபதி. புகழ் பெற்ற தளபதி அவன். தன் படை வீரர்களுக்கு சொன்னான் போருக்கு போகும் முன் சொன்னான், படை வீரர்களே கடவுளை நம்புங்கள், ஆனால் வெடிமருந்து நனையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

பூசாரியே சம்பளம் அதிகம் வேண்டுமென்றால் அரசு கிட்டதான் கோரிக்கை வைக்கிறான். எங்களுக்கு பாதுகாப்பு நிதி கொடுங்கள் என்று அரசைக் கேட்கிறான். ஓய்வூதியம் வேண்டும் என்று அரசைக் கேட்கிறான். கடவுள்கிட்ட ஒரு நாளும் கேட்டதில்லை. எல்லா பூசாரியும் சங்கம் வைத்து அரசுக்கிட்ட கோரிக்கை வைக்கிறான்.

கோயிலுக்கு அதிகமாக கூட்டம் போகிறது என்று சொன்னார்கள். பெரியார் எளிமையாக சொன்னார். அவர் எதையும் மிக எளிமையாக சொல்வார். கோயிலுக்கு கூட்டம் அதிகமாக  போகிறதா? நான் ஒரே ஒரு நிபந்தனை வைக்கிறேன். ஒரு நாளைக்கு ஆண்கள் மட்டும் கோயிலுக்கு வரவேண்டும். ஒரு நாளைக்கு பெண்கள் மட்டும் கோயிலுக்கு வரவேண்டும். அப்புறம் பார் கூட்டத்தை என்று சொன்னார். இதுதான் கடவுள் நம்பிக்கை என்பது. இந்த கடவுள் நம்பிக்கை வைத்துக் கொண்டிருப்பது வெளிநாடுகளில் அறிவுக்கு மட்டும் எதிரானது. அறிவுக்கு மட்டும் எதிரானது என்பதால் அறையிலிருந்து அறிஞர்கள் எல்லாம் உட்கார்ந்து அறிவியல் சிக்கலாக பார்த்தார்கள்.

பெரியாரே சொல்வார் கடவுள் உண்டா இல்லையா என்பது, அறையில் உட்கார்ந்து அறிஞர்கள் சொல்ல வேண்டிய செய்தி. அரங்கில் வந்து மக்களிடம் பேச வேண்டிய செய்தி இல்லை. ஆனால் ஏன் கடவுள் இல்லை என்று சொல்வதற்கு பெரியார் சில விளக்கங்களை சொல்வார். நிறைய பேர் கடவுள் இல்லை என்று சொல்லி யிருக்கிறார்கள். காலையில் எல்லாம் பேசினார்கள்.  நடிகர் கமலகாசன் கடவுள் இல்லை என்று சொல்லுவார். ஆனால், இடஒதுக்கீடு தப்பு என்கிறார். அவருக்கு கடவுள் இல்லை தான். இந்து ராம் கடவுள் இல்லை என்று சொல்லுகிற மார்க்சிஸ்ட் என்று தன்னை சொல்லிக் கொள்கிறார். ஆனால் குற்றவாளியாக இருக்கிற இளைய சங்கராச் சாரியாரை அவர் தான் காரில் அழைத்துப் போய் காஞ்சிபுரத்தில் விடுகிறார்.

இவர்களையெல்லாம் விட்டுவிடுங்கள். இந்த நாட்டிற்கு தீங்காய் வந்த இந்துத்துவா என்ற தத்துவத்தை தந்த சாவர்க்கர், காந்தி கொலையில் குற்றவாளி. இந்துத்துவா என்ற பாசிச கருத்தை முதலில் விதைத்தவர். இந்த நோய்க்கெல்லாம் காரணமாக இருந்த சாவர்க்கர் ஒரு நாத்திகர். அவர் கடவுளை நம்பியவர் அல்ல. ஆனால் பார்ப்பனன் உயர்ந்தவன். ஆரியன் உயர்ந்தவன் என்ற ஆணவ கருத்தும் ஆரியர் ஆட்சியில்தான் இந்தியா இருக்க வேண்டுமென்றும் அவர் விதைத்த நச்சு விதைகள் ஏற்படுத்தியிருக்கிற நாசங்களை நாம் அறிவோம். கடவுள் உண்டு இல்லை என்பதால் ஒன்றும் பெரிதாய் வந்து விடாது. இந்த கடவுள் நம்பிக்கையை ஏன் மறுக்கிறோம் என்பதில்தான் அடங்கியிருக்கிறது பெரியாரின் தத்துவங்கள் அனைத்தும் என்பதால்தான். பெரியார் கடவுள் மறுப்பை எப்படி சொன்னார் என்றால், கடவுளை எப்படி மறுக்கிறார் என அவரே சித்திரபுத்திரன் என்ற புனைப் பெயரில் குடி அரசில் ஒரு உரையாடலை எழுதி இருக்கிறார்.

நாத்திகனை கூப்பிட்டு ஒரு ஆத்திகன் கதை சொல் கிறான். கடவுள் எப்படியெல்லாம் உலகத்தை படைத்தார் என்று சொல்லுவான். அவர்தான் வெளிச்சத்தைக் கொடுத்தான் என்று சொல்லுவான். நாத்திகன் கேள்வி கேட்பான். அதற்கு முன் இருட்டாய் இருந்துச்சா. அப்படீன்னா இருட்டை எவன் உண்டாக்கினான்.இப்படி பல கேள்விகளை கேட்டார்.

இன்னொன்றும் சொன்னார் பக்தன் இரண்டை நம்புகிறான். கடவுளை நம்புகிறான், விதியை நம்புகிறான். பெரியார் கேட்டார், கொஞ்சம் பொறுமையாய் யோசி. கடவுள் என்பதை நம்பினால் விதியை மறந்துவிடு. விதி உண்மையாக இருந்தால் கடவுள் இல்லை. ஏனென்றால் என்னுடைய விதிப்படி நான் பிறந்தேன், வளர்ந்தேன், சாவேன் என்றால் இன்னைக்கு கீழே இறங்கி வண்டியில் போகையில் அந்த மூலையில் போய் விபத்து நேரிட்டு சாவதுதான் விதியாக இருந்தால், அப்புறம் எதற்கு கடவுளை கும்பிடனும். கும்பிட்டாலும் சாவேன். ஏன்னா விதி. அதுதான் என்ன பண்ணினாலும் சாவேன் என்றால், கடவுள் எதற்கு? அல்லது கடவுளை நம்பினால், கடவுளை வணங்கினால், பிரார்த்தனை செய்தால், அதற்கு உண்டியலில் போட்டால், பூஜை செய்தால் அந்தவிதியை கடவுள் மாற்றிவிடும் என்றால் விதியை உண்மை என்று சொல்லாதே. இரண்டில் ஏதாவது ஒன்றை சொல் என்றார் பெரியார்.


இப்போ திருமணம் பன்றப்ப பையன் எனக்கு பி.இ. படித்த பெண் வேணும்; எம்.பி.பி.எஸ். படித்த பெண் வேணும்; எல்லாம் கேட்பான். அதற்கு மேல் இவனும் படித்திருப்பான். போய் வரதட்சணை கேட்பான். என்னப்பா நீ இவ்வளவு படிச்சுட்டு போய் வரதட்சணை கேட்கிறாயே? என்றால் எங்கம்மா ஒத்துக்கவே மாட்டேங்கிறாங்க. எங்கப்பா ஒத்துக்கவே மாட்டேங்கிறாங்க என்பான். அப்பா சொன்ன பல விசயத்தை கேட்க மாட்டான். தண்ணி போடாதே என்று சொன்னால் கேட்க மாட்டான். அவன்கூட சேர்ந்து சுத்தாதே என்று சொன்னால் கேட்க மாட்டான். அப்பா வரதட்சணை கேட்க சொன்னா மட்டும் ஒத்துக்குவான். எங்கப்பா சொல்றாருங்க எப்படி மீறுவது எங்கம்மா ஆசைப்படுதுங்க என்பான்.

இப்படி பக்தன் பலவற்றில் கடவுளுக்கு மாறாக நடப்பான். ஆனால் இந்த மாதிரி வரும்போது இல்லை. அது கடவுளுக்கு எதிரானது அதை செய்யக் கூடாது என்பான். எதை என்றால் கடவுள் எதையெல்லாம் சொல்லி வைத் திருக்கிறாரோ அதை மீறுவது தப்பு என்பான். அவங்க வுங்க எப்படீனு பிரித்து வைத்திருக்கிறாரோ அப்படி அப்படி இருக்கனும் என்பான். உலகத்தில் எல்லா மதமும் எல்லா கடவுள்களும் மனிதனை சமம் என்று சொன்னது. ஆண்ட வன் முன்னால் அனைவரும சமம் என்று எல்லா மதத் தத்துவங்களும் சொன்னது. நம்ம இந்து மதம் மட்டும் வித்தி யாசமாக சொல்லியது. ஆண்டவன் முன்னால் அனைவரும் சமம் இல்லை என்று; இதுதான் இந்துமதத் தத்துவம்.

இப்ப மத்த கடவுளுக்கும் நம்ம கடவுளுக்கும் ஒரு வேறுபாடு எல்லா மத வேதங்களையும் மதத் தலைவர்கள் படியுங்கள் என்று சொன்னார்கள். பைபிளை படி என கிருத்துவ மதக் குருவும் சொன்னார். பெற்றோர்களும் சொன்னார்கள். குரானை படி என்று இஸ்லாமிய மதக் குருவும் சொன்னார், பெற்றோர்களும் சொன்னார்கள். ஆனால் இந்து மதத் தலைவர்கள் சொன்னார்கள் வேதத்தைப் படிக்காதே. ஆனால் ஏற்றுக் கொள் என்று. பெரியார் கேட்டார், ‘ஏண்டா பத்திரத்த படிக்காம கையெழுத்து போடச் சொல்லுகிற மாதிரி வேதத்தை படிக்காம ஏற்றுக் கொள் என்றால் எப்படி ஏற்றுக் கொள்வது? அதுல என்ன இருக்குதுனு சொல்லு. அப்புறம் ஒத்துக் கொள்வதா இல்லையானு நான் சொல்றேன். நீ பத்திரத்தை கொண்டு வந்து கையெழுத்து போடுனா நான் படிச்சு பார்த்துதான் போடுவேன். படிச்சு பார்க்காம நாம கையெழுத்து போட்டதா கருதிக் கொண்டு நம் மேல் இந்த மத தத்துவத்தை திணிக்கிறார்கள்.

ஆனால், அவன் (பார்ப்பான்) வசதிக்கு அதை பின்பற்றிக் கொள்கிறான். கொலை செய்யப்பட்ட சங்கரராமனை சங்கராச்சாரி ஏன் கொலை பண்ணினான் என்றால், அவர் வெளிநாட்டுக்கு போக விரும்பினார். உள்நாடு அலுத்துப் போய் வெளிநாட்டில் போய் வித்தியாசமாய் பார்க்கலாம்னு விரும்பினார். இவன் சொன்னான் இல்லை, இந்து மதத் தத்துவம் அதை அனுமதிக்காது. கடலைத் தாண்டக் கூடாது என்றான். உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டான். இந்து மதத் தத்துவம் கடலைத் தாண்டக் கூடாது என்கிறது, சங்கராச்சாரி தாண்டுவது தப்பு என்றான்.

நம் தமிழன் தத்துவம் அப்படிச் சொல்லவில்லை. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்றது. கடல் பயணத் திற்காக நெய்தல், திணை என்று தனியாக வைத்தான். போருக்கு, கல்விக்கு, தூதுக்கு கடல் தாண்டி பயணம் போகலாம். கடல் தாண்டி போவது இயல்பு நமக்கு. அவன் போகக் கூடாதுனு சொன்னான். இவன் மீறி போகலாம் னான். சங்கர் ராமன் எதிர்த்தார். ஆளை முடிச்சிட்டான். ஆனால், அந்த சிறிய செய்தியில் சாஸ்திரத்தை மீறக் கூடாது என்று கருதிய சங்கரராமன் மனைவி, முதலமைச்சர் கிட்ட பணம் வாங்க போனாங்க. பார்ப்பன பெண் மொட்டை பாப்பாத்தி காவி கட்டீட்டு அல்லவா போக வேண்டும். இந்தம்மா முழு சடையோடு பழைய உடையோடு போய் பணத்தை வாங்குவதை பத்திரிகையில் பார்த்தோம். அவன் சாஸ்திரத்தை மீறாதே என்று நம்மைப் பார்த்து சொல்வான். சங்கரராமன் மனைவி சாஸ்த்திரப்படி மொட்டை அடித்துக் கொண்டு காவி கட்டிக் கொண்டு முக்காடு போட்டு போய்தான் காசு வாங்கியிருக்கனும்.

அவங்களுக்கு வசதின்னா மீறுவார்கள். கடல் தாண்டி போகக் கூடாதுனு சாஸ்திரம் வெச்சிருக்கிற அவன், அமெரிக்காவில போய் அர்ச்சனை பண்ணினா போச்சுல. அவன் அய்யரே இல்லையே மதத்தை விட்டு போயிட்டானுல. ஆனாலும் இங்கிருந்து அங்க போயி பூஜை செய்து கொண்டிருக்கிறார்கள்.

அவன் வேதம் பாலை விற்கக் கூடாது, உணவை விற்கக் கூடாது. விற்றால் அடுத்த ஜென்மத்தில் விற்றவன் பன்றி யாக பிறப்பான் என சொல்கிறது. ஆனால் பிராமணாள் ஹோட்டல் நடந்து கொண்டிருக்கிறது. அப்ப ஒன்று அவன் அடுத்த பிறவியில் பன்றியாப் பிறக்கனும். இல்ல இப்ப திரிகிற பன்றிகள் போன பிறவியில் ஹோட்டல் நடத்தின அய்யராய் இருக்கனும். அவன் வசதிக்கு அவன் மீறிக் கொள்வான். கலப்புத் திருமணத்தை மறுப்பான். ஆனால், காந்தி வீட்டில் ராஜாஜி பெண் கொடுப்பார். அது காந்தி என்றால் கொடுக்கலாம். நம்மூரில் கொடுக்கக் கூடாது. அய்யர் போய் சுப்புலட்சுமியை கல்யாணம் பண்ணிக்கலாம். இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் சதாசிவ அய்யர் கல்யாணம் பண்ணிக்குவார். இவள் பாப்பாத்தி ஆகிவிடுவாள். அல்லது சௌந்தத்தரம் மாள் ராமச்சந்திரனை கல்யாணம் பண்ணினாலும் பாப்பாத்தியா இருப்பா. ருக்மணி, அருண்டேல் என்ற ஆங்கிலேயனை திருமணம் செய்தாலும் பாப்பாத்தியா இருப்பா. அப்பெல்லாம் பார்ப்பன தன்மை போகாது.

இப்ப இன்போசிஸ் நாராயணமூர்த்தி குடியரசு தலைவராக வரலாம்னு சொன்ன மாதிரி, அன்னைக்கு ருக்மணி அருண்டேல் குடியரசு தலைவராக வருவாங் கன்னு சொன்னாங்க. அந்த அம்மாவுக்கு டான்ஸ்ஆடுவது மட்டும்தான் தெரியும்; வேறென்ன தெரியும் அந்தம்மாவிற்கு.

அவன் வெள்ளையன், அவன் ஆரியன். நிறத்தால் பிரித்தான் வர்ணபேதம் என்று சொன்னான். வெள்ளையாக இருப்பவன் பிராமணன். மஞ்சளாக இருப்பவன் சத்திரியன். பழுப்பாக இருப்பவன் வைசியன். கருப்பாய் இருப்பவன் நம்மாள் சூத்திரன். நிறத்தால் பிரித்தான். அப்புறம் எப்படீடா உன் கடவுள் ராமனும் கிருஷ்ணனும் கருப்பாய் இருக்காங்க. இட ஒதுக்கீட்டில் வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியை பாப்பாத்தி கல்யாணம் பண்ணிக்கிற மாதிரி வெல்ல முடியாத நம் தலைவர்களை அவன் கடவுள் ஆக்கி விட்டான். எதிர்ப்பான்; இல்லை யென்றால் நம்மாளா மாறிவிடு என்பான். அவன் வசதிக்கு பலவற்றை செய்து கொண்டிருக்கிறான். நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். அத்தனையையும் கடவுள் பெயரால் நம்மை நம்ப வைத்தான் நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.
பெரியார் கடவுள் இல்லையென்று சாதாரணமாக சொல்லவில்லை. இப்படி சொல்கிறார்:

மனிதனுக்கு மனிதன் தொடக் கூடாது. கண்ணில் படக் கூடாது. தெருவில் நடக்கக் கூடாது. கோவிலுக்குப் போகக் கூடாது. குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்கிறதுபோல கொள்கை தாண்டவம் ஆடும் ஒரு நாட்டை பூகம்பத்தால் அழிக்காமலோ, எரிமலையின் நெருப்புக் குழம்பால் எரிக்காமலோ, சமுத்திரம் பொங்கி மூழ்கச் செய்யாமலோ, பூமிப் பிளவில் அமிழச் செய்யாமலோ, சண்ட மாருதத்தால் துகள் ஆக்காமலோ விட்டிருப்பதை பார்த்த பிறகும் கூட கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும், அவர் நீதிமான் என்றும், அவர் சர்வதயாபதர் என்றும் யாராவது சொல்ல வந்தால் அவர்களை என்னவென்று நினைப்பது என்பதை நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள்.

இதெல்லாம் பார்ப்பதற்கு அப்புறமும் கடவுள் இருக்கிறார் என்பதை நீ ஒத்துக் கொள்கிறாயா? ஆக பெரியாரின் கடவுள் மறுப்பு சாவர்க்கரின் கடவுள் மறுப்பு அல்ல. கமலகாசனின் கடவுள் மறுப்பு அல்ல. இவர் கடவுள் மறுப்பு மக்களை ஒன்றாக்க வேண்டும் என்ற சிந்தனை யோடு உழைப்பை மதிக்க வேண்டுமென்ற சிந்தனையோடு உழைப்பவனை அவமானப்படுத்துபவனை எதிர்க்க வேண்டுமென்ற சிந்தனையோடு முன் வைக்கப்பட்ட கடவுள் மறுப்பு அதுதான், பெரியாரின் கடவுள் மறுப்பு. அவர்  கடவுளை மறுப்பதற்குக்கூட பல காரணங்களை சொல்கிறார். இன்னொரு இடத்தில் சொல்கிறார். ஏனென்றால் பெரியார் திராவிடர் கழகம் ஏன் நாத்திகர் விழா எடுக்கிறது வெறும் கடவுள் இல்லையென்று சொல்லி விட்டால் எங்களுக்கு ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை. என்ன நமக்கு கொஞ்சம் செலவு மிச்சமாகும். அதற்கு மேல் ஒன்றும் ஆகிவிடாது. சாதி வேறுபாடுகளைப் பார்த்து பெரியாருக்கு கோபம் வந்தது.  பொதுவாக நாம் சிந்திப்பதற்கு மாறுபட்டு சிந்தித்தவர் பெரியார்.
நாத்திகம் என்பது நம் காலத்தில் தான் கடவுள் மறுப்பாக பொருள் கொள்கிறோம். புராண காலத்தில் வேத மறுப்பை தான் நாஸ்திகம் என்றார்கள். நாஸ்திகோ வேத நிந்தக என்பது வேத சுலோகம். கடவுளைமறுத்தாலும் கவலை இல்லை. பார்ப்பானுக்கு உயர்வும், உழைக்கும் நமக்கெல்லாம் இழிவும் கற்பித்து, நியாயப்படுத்தும் வேதத்தை மட்டும் மறுத்துக்கொள்ள மாட்டோம் என்று கூறும் சுயநல பார்ப்பன மனோநிலைதான் அது. அந்த பார்ப்பன சிந்தனைக்கு எதிர்நிலை தான் பெரியாரின் நிலை. நாத்திகம் என்பது சாதி ஒழிப்புக்கு, இழிவு ஒழிப்புக்காக என்பதே பெரியாரின் நிலைப்பாடு.

சைமன் கமிஷனை எல்லோரும் எதிர்த்தார்கள். நேற்று பிறந்த நாள் வந்தது புரட்சியாளர் அம்பேத்கருக்கு. இரண்டே பேர் தான் இந்தியாவில் சைமன் கமிஷனை வரவேற் றார்கள், பெரியாரும் அம்பேத்கரும். எதிர்த்தவர்கள் சொன்ன காரணம் அந்த குழுவில் இந்தியர்கள் யாரும் இல்லை என்று எதிர்த்தார்கள். பெரியாரும் அம்பேத்கரும் சொன்னார்கள், இந்தியர்கள் இல்லையென்பதால் தான் நாங்கள் வரவேற்கிறாம். ஒருவேளை இந்தியன் இருந்தால் பார்ப்பானாக இருப்பான். அவன் எனக்கு தொல்லைதான் கொடுப்பான். எங்களுக்கு எதிராக செயல்படுவான். ஆக, இந்தியன்  இல்லை என்பதால் வரவேற்கிறோம். ஏன்னா ஆங்கிலேயன் நடுநிலையாக இருப்பான் என்ற எதிர்பார்ப்போடு.

இவர்களெல்லாம் பெரியாரைப் பார்த்து கேட்டார்கள், அந்நிய ஆட்சிக்கு எதிராக இருக்கிறீர்களா? அம்பேத்கரை கேட்டார்கள், விடுதலை பற்றி உங்கள் கருத்து என்ன? அம்பேத்கர் சொன்னார் விடுதலை பற்றி அப்புறம் சொல்கிறேன். விடுதலை பெற்ற இந்தியா யார் கைக்குப் போகும் என்று முதலில் சொல். அப்புறம் விடுதலை வேண்டுமா? வேண்டாமா? என்று நான் சொல்கிறேன். விடுதலைபெற்ற இந்தியா மீண்டும் ஓர் அந்நியன் கைக்கு நமக்கு தொடர்பில்லாதவன் கைக்கு போய் நமக்கு தொடர்ந்து தாழ்ந்த நிலையே இருக்குமானால் எனக்கு எதற்கு விடுதலை அவனே இருந்துட்டுப் போறான். அதைத்தான் பெரியாரும் சொன்னார். யார் அந்நியர்? என்னைத் தொடாதே, கிட்ட வராதே, பார்த்தால் தீட்டு என்று சொல்கிற நீ எனக்கு அந்நியனா? ஹலோ பிரதர் என்கிறான். கை குலுக்குகிறான். நான் சமைத்ததை சாப்பிடுகிறான். அவன் எனக்கு அந்நியனா?

இங்குதான் மற்றவர்கள் பார்த்த பார்வைக்கும் புரட்சி யாளர் அம்பேத்கரும்,பெரியாரும் பார்த்த பார்வைக்குமான வேறுபாடுதெரிகிறது. அம்பேத்கர் ஒரு முறை சொன்னார் உன்னுடைய நலம் பெரிதா? நாட்டின் நலம் பெரிதா? என்று கேட்டால்  நான் நாட்டின் நலம்தான் பெரிது என்று சொல் வேன். நாட்டின் நலம் பெரிதா? ஒடுக்கப்பட்ட மக்களின் நலம் பெரிதா? எனக் கேட்டால் எனக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் நலம்தான்பெரிது. நாட்டின் நலம் பற்றி எனக்கு அக்கறை இல்லை என்று சொன்னார்.  எதற்கு நாடு, எதற்கு ஆட்சி, எதற்கு விடுதலை எல்லாம் கேட்கிறோம். இந்த நாட்டு மக்கள் எப்போதும் போல இருப்பார்கள் என்றால் அப்புறம் எதற்கு மாற்று அரசு, அது தமிழ்நாடாக வருவதாக இருந்தாலும் சரி, விடுதலை பெற்ற தமிழ்நாடு யார் கைக்கு வர வேண்டும் என்ற கேள்வியோடு தான் தமிழ்நாடு விடுதலையும் பேசப்பட வேண்டும். இல்லையென்றால் அதற்கு பொருள் இல்லை. யாரோ எழுதி வைத்த தத்துவம் என்பதற்காக நாடு பிரிய வேண்டும் என்று கருதினால் அது பொருளில்லாத பிரிவினை, பொருளில்லா நாட்டுக் கொள்கை, அது பொருளோடு இருக்க வேண்டுமென்ற வர்கள் பெரியாரும் அம்பேத்கரும் அதை நினைவு கூர்ந்து தான் இந்த நாத்திகத்தை பேசிக்கொண்டிருக்கிறோம்.
பெரியார் சொன்னார், “முதலில் சாதி வித்தியாசம் என்கிற கொடுமைத் தன்மை என்பது இந்த நாட்டை விட்டு ஒழிய வேண்டும். ஒழிய வேண்டுமா வேண்டாமா என முடிவு தெரிந்துவிட வேண்டும். இரண்டாவதாக ஒரு மனிதனுக்கு கீழாக மேலாக சாதி என்று ஒன்றும் இல்லை என்ற முடிவுக்கு வந்தாக வேண்டும். அதற்கு மேல் சாதி வித்தியாசத்திற்கு  ஆதரவாய் இருப்பவைகளை அடியோடு ஒழிக்க முயல வேண்டும். அப்படி செய்யாமல் உயர்வு தாழ்வை போக்கி விடலாம் என்று கருதினால் அது நுனி மரத்தில் உட்கார்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டுகிற மனிதனின் முட்டாள்தனமான செய்கைக்கு ஒப்பாகும்.

சாதி ஆச்சாரம் என்பவை மதம் என்னும் மரத்தை சுத்திக் கொண்டிருக்கின்றன. சாதியை மதத்திலிருந்து பிரித்து எடுக்க வேண்டும். அப்படி பிரிப்பதற்கு முடியாத வகையில் சாதியும் மதமும் ஒன்றோடு ஒன்று இறுகி பிணைந்திருக்குமேயானால் இந்த இரண்டையும் வீழ்த்தியாக வேண்டும். சாதி மட்டும் ஒழிக்கனும் என்றுதான் நான் சொல்கிறேன். முடிஞ்சா சாதியை தனியா எடுத்து ஒழிச்சுட்டு போய்விடலாம். அதெப்டீங்க முடியும். இந்து மதத்தோடு பிணைந்துதான் இருக்கிறது. இந்து மதத்தை விட்டு சாதியை பிரிக்க முடியாது. அம்பேத்கர் அவர்கள் தன்னுடைய 25வது வயதில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உரையாற்றுகிறபோது சொன்னார், சாதி ஒற்றையாக இயங்காது பன்மையில் தான் இயங்கும். ஏன்னா தனியா ஒரு சாதி மட்டும் இருக்க முடியாது. பத்து சாதி இருந்தாத்தான் அது மேலே இது கீழ இருக்க முடியும். அம்பேத்கர் சொன்னார், “இந்து மதம் என்பது பல அடுக்குகள் கொண்ட மாளிகை; ஒரு அடுக்குக்கும் இன்னொரு அடுக்குக்கும் படிக்கட்டும் இல்லை வாசலும் இல்லை ஒரு அடுக்கில் பிறந்தவன் அதிலே சாக வேண்டும். வேற அடுக்குக்கு போகவும் முடியாது வெளியே வரவும் முடியாதுஇப்படித்தான் இந்துமதம் நம்மை வைத்திருக் கிறது என்று அன்றும் பேசினார், இறுதி வரையும் அதைத்தான் பேசினார். அப்ப மதத்திலிருந்து சாதியைப் பிரிக்க வேண்டும் முடிஞ்சா உன் மதம் நல்லதென்றால் பிரிச்சு எடுத்துட்டு போயிடுப்பா. நான் இந்து மதத்தை பற்றி ஒன்னும் சொல்லிக்கலே. ராமகோபாலனுக்கும் சொல்லிக்கலாம். இந்து மதத்தில் நமக்கு கோபம் இல்லை. சாதி மட்டும் வேண்டாமென்று சொல்லிக்கிறோம். இல்லை சாதியை இந்து மதத்தைவிட்டு பிரிக்க முடியாது.

அம்பேத்கர் அவரது சட்ட வரைவு குழுவில் அரசியல் நிர்ணய சபையில் பேசுகிறபோது ஒன்றைச் சொன்னார், யாராக இருந்தாலும் இந்து சட்டத்தை எடுத்துப் படியுங்கள். இந்து தத்துவத்தின் முதல் வரியில், முல்லா எடிசன் என்று ஒன்று இருக்கிறது. அதுதான் இந்து சட்டத்தைப் பற்றி ஆழமாக எழுதி வைத்திருக்கிற ஒரு நூல். அதில் தான் பல நூறு பதிப்புகள் வந்து விட்டன.   அந்த முல்லா எடிசனின் முதல் பக்கத்தில் சாதி இல்லாத இந்து என்பவன் இருக்க முடியாது என்று சொல்கிறது. இந்து மதம்னா சாதி இருக்கும். இப்ப மதம் மாறாதேனு சொல்கிறான். திருப்பிக் கொண்டு வருவதற்கு மதமாற்ற இயக்கம் நடத்தப் போகிறோம் என்கிறான். இஸ்லாமியனும் கிறிஸ்துவனும் பண்ணினா மதம் மாற்றம். இவன் பண்ணினா சுத்தி இயக்கம்; தாய் மதத்திற்கு கொண்டு வருகிறார்களாம். சரி, பத்து தலைமுறைக்கு முன்னால் வந்த கிறிஸ்துவனை கொண்டு வா உன் மதத்திற்கு, எந்த சாதியில் சேர்த்துக் கொள்கிறாய், அதை மட்டும் சொல்லு. உன் மதத்திற்கு வேண்டுமென்றால் கொண்டு வந்து விடலாம்.

மதமாற்றம் ஒன்றும் புதிதல்ல. அது பழசு. அந்தக் காலத் தில் நடந்துதான் சமணனாக நின்ற சேர்நெடுமாறனை கூண்பான்டியனை சைவ மதத்திற்கு திருப்பிக் கொண்டு வருவதற்கு திருஞானசம்பந்தர் ஏற்பாடு செய்தார்,. தர்ம சேனர் (எ) திருநாவுக்கரசர் சமணராக இருந்தவரை திருநாவுக்கரசராக சைவ மதத்திற்கு கொண்டு வந்திருக் கிறார்கள். நீ தான் மத மாற்றத்தை முதலில் செய்துள்ளாய். இப்ப பண்ணுவதெல்லாம் புது மதமாற்றம். இப்ப கொஞ்ச நாளாதான் செஞ்சுட்டுருக்கிறான் அவன். நீ ஆயிரம் ஆண்டுகளாய் செய்திருக்கிறாய். அடுத்த மதத்துக்காரனை மிரட்டி மிரட்டி கொண்டு வந்திருக்கிறாய். சமணனை, பவுத் தனை எல்லாம் பண்ணியிருக்கிறாய். இந்த மதமாற்றத்தை நீ தடுக்கிற போது சாதி இல்லாம மதமில்லை என்ற போதுதான் நான் அதையும் சேர்த்துதான் எரிக்கிறேன் என்று பெரியார்  சொல்கிறார்.


அப்படி பிரிப்பதற்கு முடியாத வகையில் சாதியும் மதமும் ஒன்றோடு ஒன்று இறுகப் பிணைந்து கொண் டிருக்குமேயானால் இந்த இரண்டையும் வீழ்த்தியாக வேண்டும். முன்னிருந்த உயர்சாதி கபடர்கள் அவ்வளவு தந்திரமாக அப்படி பிரிக்க முடியாத வகையில் சாதியையும் மதத்தையும் பிணைந்து பின்னிக் கொண்டிருக் கும்படி இறுகக் கட்டி வைத்திருக்கிறார்கள். ஆகையால் சாதியை ஒழிக்க தலைப்படுகையில் மதமும் வெட்டப்படுகிறது என்று பயப்படாமல் சாதி மரத்தையும் மத மரத்தையும் சேர்த்து நெருப்பு வைத்து சாம்பலாக்க வேண்டுமென்பது தடுக்க முடியாத அவசியமாகும். இதிலும் ஒரு சங்கடமிருக்கிறது. அதாவது மதமானது வேதம், புராணம் ஆகியவைகளோடு கட்டிப் பிணைந்து கொண்டிருக்கிறது. ஆகையால் இந்த வேதம் புராணங்களிலிருந்து மதத்தைப் பிரிக்க வேண்டும். இதிலும் பிரிக்க முடியாதபடி கட்டு பலமாக இருந்தால் இங்கும் இரண்டையும் சேர்த்து நெருப்பு வைக்க வேண்டியதுதான் வேற வழியில்லை. ஆனால் இந்த வேதம் கடவுளோடு சேர்த்துக் கட்டப்பட்டிருக்கிறது. இதிலும் பிரிக்க முடியாத பிணைப்பு இருந்தால் அந்த கடவுள் என்பதன் தலையிலும் கை வைத்துதான் ஆக வேண்டி இருக்கிறதுஎன்று சொல்கிறார். வேறு வழியில்லாமல் தான் கடவுளுக்கு போனார்கள்.

ஒரு வேளை மற்ற நாட்டில் இருப்பதைப்போல மனிதனை மனிதன் உயர் தாழ்வு கற்பிக்க கடவுள் காரணமில்லை என்றால் பெரியார் நாத்திகம் பேசியிருக்க மாட்டார் என நினைக்கிறேன். ஒரு வேளை பேசாமல்கூட இருந்திருக்க லாம். வேண்டுமென்றால் அறையில் உட்கார்ந்து ஆராய்ச்சி கட்டுரை எழுதலாம். வீதியில் வந்து பேச வேண்டிய அவசிய மும் பெரியாருக்கும், அம்பேத்கருக்கும் இருந்திருக்காது. இந்த கடவுள் தத்துவத்தின் பெயரால்  கற்பிக்கப்பட் டிருக்கிற இழிவுகளை, செய்யப்பட்டிருக்கிற பிரிவினைகளை நியாயப்படுத்திக் கொண்டு, நம்மை பிரிவினைவாதிகள் என பேசுகிறார்கள். ஏன்னா தமிழ்நாடு தனியா வர வேண்டும் என நாம் சொல்கிறோம். ஒன்று பட்ட இந்தியா வில் எங்களுக்கு விடுதலை இல்லை என நாம் நம்புகிறோம்.
நம் தலைவர் நமக்குச் சொல்லி சென்றிருக்கிறார். அவன் நம்மை பிரிவினைவாதி என்கிறான். பெரியார் கேட்டார், மண்ணுக்கு பிரிவினை கூடாது என்கிறாயே, மனிதனுக்குள் பிரிவினை இருக்கலாமா? நீ அதைச் சொல்லவில்லை என்றால் நான் ஏன் இதை சொல்லு கிறேன். எனக்கு அவசியமே இல்லை. ஒன்றுபட்ட இந்தியா வில் எங்களுக்கு விடுதலை இல்லை. எங்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விடுதலை இல்லை என்று கருதினார். அவர்களுடைய இழிவுகளிலிருந்து விடுபட முடியாது என்று கருதினார். இந்த சாதி இந்து மதம் எங்களை விடாது என்று கருதினார். எனவே தனியா வந்திடலாம் என சொன்னார். நீ அதை ஒழி என்று சொன்னார்.
ஒரு வேளை ஒன்றுபட்ட இந்தியாவில் சாதி ஒழிந்தாலும் நிலைத்திருக்காது என்று சொன்னார் பெரியார். கொஞ்ச நாளில் திருப்பி வந்திடும் என்றார். பொதுவுடமை பற்றி நாம் பேசுகிறோம். நாம் அதற்கு ஆதரவானவர்கள். ஆனால் வழக்கமான பொதுவுடமை வேறு பெரியார் பேசிய பொது வுடமை வேறு. பெரியார் தான் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை முதன்முதலில் தமிழில் மொழி பெயர்த்தார்.  இந்திய மொழிகளில் முதலில் தமிழில்தான் ஆங்கிலத் திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது. அதை செய்தவர் பெரியார்.

1925
ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பு ரீதியாக இந்தியாவில் வந்துவிட்டது. ஆனால் 1931 ஆம் ஆண்டு வரை அவர்கள் மொழி பெயர்க்கவில்லை. பெரியார் தான் மொழி பெயர்த்து வெளியிட்டார். அதை புத்தகமாக வும் போட்டார். ஏழெட்டு வாரம் எடுத்து குடிஅரசில் போட்டு விட்டு பிறகு புத்தகமாகவும் போட்டார் முன்னுரையில் பெரியார் எழுதினார். அதை எழுதும் போதே சொன்னார், இல்லையில்லை இந்த நாட்டில் பொதுவுடமை அப்படியே வந்து விடாது. இங்கே மக்களை பிரிப்பதற்கு பாட்டாளிகளை பிரிப்பதற்கு சாதிமுறை இருக்கிறது. அதை எடுத்துவிட்டு அதற்கு அடிப்படையான இந்து மதத்தை ஒழித்து விட்டுதான் இங்கு பொதுவுடமை வரும் என சொல்லிவிட்டுதான் இந்த அறிக்கையை வெளியிட்டார்.

அவர் வெளிநாட்டுக்கு போனார். ரஷியா புரட்சியைப் பார்த்து மகிழ்ந்து போய், ரஷிய நாட்டை பார்க்க விரும்பினார். 1931 ஆம் ஆண்டிலேயே ரஷியாவிற்கு போனார். 1932 ஆம் ஆண்டில் மூன்று மாத காலம் ரஷியாவில் இருந்தார். அந்த நாட்டில் 1932-ல் மே தின விழாவிற்கு பெரியார் தான் சிறப்பு விருந்தினர். இந்தியாவிலிருந்து வந்திருக்கிற நாத்திக தலைவர் என பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்டு பேரணியில் கலந்து கொண்டார். அங்கிருந்து திரும்பி வரும்போது இலங்கையில் வந்து பேசினார். முதலில் இலங்கை பிரசங்கங்கள் என்றும், இப்போது இலங்கை பேருரை என்றும் நூலாக வந்திருக்கிறது படித்துப் பாருங்கள்.  ரஷ்யாவை பார்த்தார், மகிழ்ந்தார், வரவேற்றார். ஆனால் இந்தியாவிற்கு பொருந்தாது என்று சொன்னார். ரஷ்யாவில் மூன்று மாதம் இருந்துட்டு வந்து இந்தியாவிற்கு அந்த முறை அப்படியே பொருந்தாது. சதி செய்வதற்கு என்றே ஒரு சாதி இல்லாத நாட்டில் லெனின் வெற்றிப் பெற்று விட்டார் என்று சொன்னார். இங்க முடியாது என்றார். சதி செய்வதற்கென்று ஒரு சாதி அதற்கென்று ஒரு அமைப்பு இங்கிருக்கிறது. அதை தடுக்க பொது உரிமையோடு கூடிய பொதுவுடமை வேண்டும் என்று பெரியார் சொன்னார்.

வங்கிகளெல்லாம் தேசியமயமாக்கினோம். நாட்டுடமை என்றால் பொதுவுடமை என்றுதான் பொருள். ஆனால், வங்கியில் நம்ம ஆளு இருக்கிறார்களா? அவர்களிடம் தான் இருக்கிறது. அதனால் தான் நம்ம வந்து செருப்புக்கடை வைக்க ஐந்தாயிரம் ரூபாய் வாங்கினாலும், மின் மோட்டார் வாங்க பத்தாயிரம் ரூபாய் வாங்கினாலும், மாடு வாங்க பதினைந்து ஆயிரம் ரூபாய் வாங்கினாலும், ஒரு மாதம் தவணை கட்டவில்லைனா மாட்டை பிடித்துக் கொண்டு போய் விடுகிறான். கடையை காலி செய்கிறான். வட்டிக்காக வீட்டிலுள்ளதையும் சேர்த்துக் கொண்டு போகிறான். ஆனால், பி.ஜே.பி. ஆட்சியில் கடைசி ஆண்டில் தள்ளுபடி செய்த கடன் மட்டும் 86000 கோடி ரூபாய். ஏன்னா வங்கி அதிகாரிகளாக அவர்கள் இருக்கிறார்கள். நம்மாளா வாங்கியிருப்பான் 86000 கோடி, 5000 அல்லது 10000 வாங்கியிருப்பான். அதிகபட்சம் அவ்வளவுதான். வங்கிகள் அவர்களிடம் தான் இன்றும் இருக்கிறது. பேருக்கு வேண்டுமென்றால் நாட்டுடமை ஆக்கியிருக்க லாம் என்று பெரியார் சொன்னார்.
பொது உரிமை வராத நாட்டில் பொதுவுடமை வந்தால் மீண்டும் ஆதிக்கக்காரன் கைக்கே பொதுவுடமை போய் விடும் என்று சொன்னார். அதை மாற்றுவதற்காகத்தான் இந்து மதத்தை ஒழிக்க வேண்டும். சாதியம் ஒழிய வேண்டும். அதைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிற வேதங்கள் ஒழிய வேண்டும். அதற்கு அடிப்படையாக உள்ள கடவுள் ஒழிய வேண்டுமென்று சொன்னார் என்பதை நாம் புரிந்து கொண்டு கடவுள் மறுப்பை பேச வேண்டும்.
பெரியார் பேசிய கடவுள் மறுப்பு பார்ப்பன எதிர்ப்போடு கூடிய கடவுள் மறுப்பு. சாதி ஒழிப்பை இலக்காகக்கொண்ட பார்ப்பன எதிர்ப்பு. வெறும் பார்ப்பன எதிர்ப்பாக இருந்தால் திருநெல்வேலியில் அதிகம் இருக்கும் சைவப் பிள்ளைகள் நம்மைவிட அதிகமாக பார்ப்பனர்களை எதிர்ப்பார்கள். அவன் நான் தான் பெரிய சாதி. நீ என்ன பெரிய சாதி என்று பார்ப்பானை எதிர்க்கிறான். அண்ணா சொல்வார் பார்ப்பன எதிர்ப்பு மட்டுமே எங்கள் இலக்காக இருக்கு மானால் எங்கள் தலைமையிடம் ஈரோட்டில் இருக்காது. திருநெல்வேலியில் இருந்திருக்கும். அவன் பார்ப்பானை எதிர்ப்பதன் நோக்கம் வேறு. நம் நோக்கம் வேறு. சாதி ஒழிப்பை இலக்காகக் கொண்ட பார்ப்பன எதிர்ப்பு. பார்ப்பன எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்ட கடவுள் மறுப்பு. அதைத்தான் பெரியார் செய்தார். அதைத் தான் பெரியார் சொன்னார். அதைத்தான் நம்மிடம் எதிர் பார்த்தார்.
மக்களிடம் கொண்டு சேர்ப்பது கடவுள் மறுப்பை மட்டுமல்ல. பெரியார் கடவுள் மறுப்பை சொன்னதன் நோக்கத்தையும் கொண்டு சேர்க்க வேண்டும். நமக்கு மேலான ஒருவனைப் பார்த்து நமக்கு வருகிற கோபம் கீழானவனை உயர்த்த வேண்டும் என்கிற பரிவாகவும் இருக்க வேண்டும். பெரியாரை கேட்டார்கள் நீ ஏன் பார்ப்பானை எதிர்க்கிறாய், ஏன் anti-brahmin ? பெரியார் சொன்னார், ஆம் நான் anti-brahmin ஏனென்றால் நான் Pro-Human  என ஆங்கிலத்திலேயே திருப்பிச் சொன்னார். நான் மனிதாபிமானத்துக்கு ஆதரவாக இருப்பதால் பார்ப்பானை எதிர்க்க வேண்டியிருக்கிறது.

அதை நாம் புரிந்து கொண்டு பெரியாரை உள்வாங்கிக் கொள்வது என்பது கடவுள் மறுப்பை மட்டுமல்ல, ஏன்னா அவன் புதுப்பிச்சுக்குவான். ஆண்டாண்டுக்கு புதுப்பிக்  கிறான். காலையில்கூட கருத்தரங்கில் பேசினார்கள். ஆண்டுதோறும் திருமணம் பண்ணுகிறான். பெரியார் தான் கேட்பார், ராமனுக்கும் சீதைக்கும் போன வருடம் கல்யாணம் பண்ணினயே திரும்பி ஏன் கல்யாணம்? சீதை ஓடிப் போயிட்டாளா? இல்லை செத்துப் போயிட்டாளா? யாரையாவது கேட்டாயா? என பெரியார் கேட்டார். வள்ளி திருமணம் ஏன் ஆண்டுதோறும் நடக்குது, என்ன ஆச்சு? முருகனுக்கு ஏற்கனவே கல்யாணம் பண்ணிய வள்ளி என்ன ஆச்சு? அது வேற வள்ளியா? அது எஸ். வள்ளியா? இது பி. வள்ளியா? அப்படி ஏதாவது இன்ஷியல் மாறிய பெண்ணா அதே வள்ளியை திரும்பத் திரும்ப ஏன் கல்யாணம் பண்ணுகிறாய்? என பெரியார் கேட்டார். யாரும் பதில் சொல்லவில்லை. ஏன்னா பதில் இல்லை.

பெரியார் புராண கதைகளுக்கெல்லாம் கேள்வி கேட்டப்போ அறிவியல் பூர்வமாக யாரும் பதில் சொல்லவில்லை. தீபாவளி கதை சொன்னார்கள். பூமியை சுருட்டினான். டேய் பூமி தட்டையா? இல்லை பாயா? சுருட்டறதுக்குனு கேட்டார். யாரும் பதில் சொல்லவில்லை. பூமியை சுருட்ட முடியாது. உருட்டத்தான் முடியும். சரி சுருட்டினாய் என்றே வைத்துக் கொள். எங்க நின்னுட்டு சுருட்டினாய் எனக் கேட்டார். சரி சுருட்டினான் கொண்டு போய் கடலில் வைச்சா கடல் எங்க தனியாவா இருக்குதுனு கேட்டார். இதையெல்லாம் நாம் சிந்தித்து பார்க்கவில்லை என்பதுதான் இருக்கிற இழிநிலையே.

வேடிக்கையா கேட்டார், முருகன் மயில்மேல் போனானாம். ஏண்டா இரண்டு பக்கமும் கால் போட்டா எப்படீடா மயிலால பறக்க முடியும்னு கேட்டார். இது சின்ன செய்தி. நாம் சிந்தித்துப் பார்க்கவில்லை. இதுவரைக்கும் பார்க்கல. முருகனை பார்த்து கும்பிட்டுதான் இருந்தோம். இரண்டு பக்கம் கால் போட்டா இறக்கையை விரிக்க முடியாதுனு யாரும் நினைச்சு பார்க்கல. பெரியார் கேட்டார்.

நாம் நினைக்காத பல செய்திகளைப் பெரியார் கேட்டார். கடவுள் இல்லை என்று சொல்லுவதற்கு மட்டுமில்லை. இந்த கடவுள் பெயரால் கற்பிக்கப்பட்டிருக்கிற வேதங்கள், அதனால் நிலைத்திருக்கின்ற மதம், அதன்பெயரால் இருக்கிற சாதி, எல்லாவற்றையும் ஒழிப்பதாக சொன்னார். இந்த நாத்திகர் விழாவில். அதுதான் செய்தி.
கடவுள் மறுப்பு என்பது சாதி மறுப்பே என்பதை நம் தோழர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நான் திருமணங்களில் எல்லாம் அடிக்கடி சொல்வேன், அவன் மார்க்சிஸ்ட்டாக இருப்பான், பெரியாரிஸ்ட்டாக இருப்பான், அம்பேத்கரிஸ்ட்டாக இருப்பான், ஆனால் ஆணாகத்தான் குடும்பத்தில் இருப்பான். அதில் பெரிய மாற்றம் இருக்காது என்று. நம்மில் பலர் அப்படித்தான் நாத்திகராக இருப்பார்கள். ஆனால், சாதிக்காரர்களாக இருப்பார்கள். அதை நாம் மனதில் கொண்டு உண்மையான கடவுள் மறுப்பும், உண்மையான நாத்திகமும் சாதி ஒழிப்பில்தான் இருக்கிறது என்பதை மீண்டும் மீண்டும் நினைவூட்டி வந்திருந்த உங்களுக்கு நன்றி சொல்லி இந்நிகழ்ச்சியை அழகாக முறையாக சிறப்பாக ஏற்பாடு செய்த தோழர்களை பாராட்டி விடை பெறுகிறேன்.

No comments:

Post a Comment