Wednesday 1 June 2011

கொளத்தூர் மணி - நேர்க்காணல்

கொளத்தூர்   மணி...
- மணா

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின்  தலைவர். ஈழத்திற்குத் தனித்துப் பயணப்பட்ட போதும், இராஜ்குமாரை வீரப்பனிடமிருந்து மீட்டு வந்த சந்தரப்பத்திலும் தமிழக ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டவர். சமீபத்தில் சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டபோது அதை வெகுவாக ஆதரித்துக் குரல் கொடுத்த  அமைப்பு இவருடையது.

மேட்டூருக்கு அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த கொளத்தூர் மணி -தமிழக அளவில் பரவலாகப் பிரச்சாரத்தில் மும்முரப்பட்டியிருக்கிறார். சென்னையில் கடற்கரையிலிருந்து சற்றுத் தூரத்தில் பெரியார் திராவிடர் கழகத்தின் அலுவலகம். தரையில் விரித்த பாயில் கொளத்தூர் மணி உட்கார்ந்து பேச, எதிரே விடுதலை இராசேந்நிரன் உள்ளிட்ட அவரது தோழர்கள்.  நான்கு மணி நேரம்வரை நீடித்தது இந்த நேர்காணல், அவருடைய சொந்தக் கிராமத்து வாழ்க்கையிலிருந்து இயல்பானபடி துவங்குகிறது.

சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணைக்குப்  பின்புறம் கொளத்தூரிலிருந்து 4 கி.மீ தள்ளி உள்ள உக்கம்பருத்திகாடுதான் என்னுடைய சொந்தக் கிராமம். இன்றைக்கும் நாளொன்றுக்கு இரண்டு தடவை மட்டுமே பேருந்து வந்து போகிற சின்னக்  கிராமம் அது. விவசாயம்தான் எங்களுடைய  தொழில். மேட்டூர் அணைக்கு உட்புறமாக இருந்த பகுதியில் எங்கள் முன்னோர்கள்  வாழ்ந்திருக்கிறார்கள். அணைத்தேக்கத்தினால் பாதிக்கப்பட்டு எங்களுடைய நிலத்தின் பெரும்பகுதி மூழ்கிவிட்டது.

எங்களுடைய தாத்தா பெரிய லேவாதேவிக்காரர். என்னுடைய அப்பா செங்கோடன் வன இலாகாவில் ஒப்பந்தகாரராக இருந்தார். மூங்கில்களையும், விறகையும் ஒப்பந்தத்தில்  எடுத்து  வெளியிடங்களுக்கு  அனுப்புவார். எங்கள் ஊர் கர்நாடகா மாநிலத்துக்கு அருகில் உள்ளதால் இரண்டு மாநிலங்களுடனும் அவருக்கு வியாபாரத்  தொடர்பிருந்தது. கூடவே லாரிகளின் உரிமையாளராகவும் இருந்தார். சொந்த ஊரில் பள்ளிகூடமில்லை. அதனால் ஐந்தாவது வரை வீட்டிலேயே படித்தேன். கொளத்தூரில்  உயர்நிலைப்பள்ளிப் படிப்புப் படித்தேன். பி.யு.சி. படிக்க சேலம் அரசினர் கல்லூரிக்குப் போனேன். அதில் தோற்றுப்போய் மீண்டும் எழுதித் தேறிவிட்டேன். உடனே  ஒரு வேலை கிடைத்தது. 1966 இல் கொளத்தூர்  ஊராட்சி ஒன்றியத்தில் எழுத்தராக வேலையில் சேர்ந்தேன். 1971 வரை அங்கு வேலை  பார்த்தேன். என்னை இன்னொரு ஊருக்கு மாற்றியதால் அதை விட்டுவிட்டேன்.

* இயக்கத்துடன் எப்போது தொடர்பு ஏற்பட்டது?

பள்ளியில் படிக்கும்போது  அங்கிருந்த தமிழாசிரியரான புலவர் வேணுகோபால் திராவிட இயக்க உணர்வுள்ளவர். அவருடைய வகுப்பில் அந்த உணர்வை ஊட்டுவார். அரசு நூலகத்தில் விடுதலையைத் தொடர்ந்து  படித்துவந்தேன். பிறகு பெரியாருடைய நூல்களை மொத்தமாக வாங்கிப் படித்தேன்.  அதற்கு முன்பே  ‘தமிழர் தலைவர்’, ‘பணம் பிடுங்கிப் பார்பனர்கள்’என்கிற  நூல்களைப் படித்திருக்கிறேன்.

1976 ல் தேர்தல் பிரச்சாரத்திற்காக திருச்செங்கோடு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்குப் பிரச்சாரம் செய்வதற்காக கொளத்தூருக்கு வந்திருந்தார் பெரியார். பெரும்பாலும் சமுக பிரச்சனைகளைப் பற்றிதான் அதிகம் பேசினார்.  அப்போதுதான் பெரியாரை முதலில் பார்தேன். கல்லூரி மாணவராக இருந்தபோது 1965 இல் இந்தியை எதிர்த்து  நாங்கள்
போராடிய போது பெரியார் இந்தி எதிர்ப்புக்கு ஆதரவாகக் குரல் கொடுக்காதது குழப்பமாக இருந்தது. பிறகுதான் அவரைப் புரிந்துகொள்ள முடிந்தது.

* எப்போது திராவிடர் கழகத்தில் இணைந்தீர்கள்?

1966 செப்டம்பரில் பெரியார் பிறந்த நாள் விழா மூலம் செயல்பாட்டைத் தொடங்கினேன். திராவிடர் கழகத்தில் அப்போது உறுப்பினர் முறை என்பதெல்லாம் இல்லை. 72 க்கு பிறகு சேர்த்தார்கள். பிறகுதான் உறுப்பினரானேன். கொளத்தூரில் எங்களுடைய வீட்டிற்கு முன்னால் பெரியாரின் பெயரை எழுதி வைத்திருந்தேன். அவரை வைத்துக் கூட்டம் போடுவதற்காகக் கடிதம் எழுதியிருந்தேன். மேட்டூரில் உள்ள திராவிடர் கழகப் பிரமுகரான டி.கே. ராமச்சந்திரனைச் சந்திக்கச் சொல்லிக் கடிதம் எழுதியிருந்தார் பெரியாரின் செயலாளராக இருந்த மகாலிங்கம். அவரைப் போய்ப் பார்த்தேன். சொன்னபடியே பெரியார் வந்து மேட்டூரில் நான்கு நாட்கள் தங்கியிருந்தார். அதற்கு முன்பு ராமனைச் செருப்பால் அடித்த சேலம் திராவிடர் கழக மாநாட்டுக்குப்  போயிருக்கிறேன். அங்குதான் பலரைச் சந்தித்தேன். ஆனைமுத்து அவர்களுடன் தொடர்பு  ஏற்பட்டது. அவரை வைத்து  ‘காந்திய மாயை - தேசிய மாயை’ என்கிற தலைப்பில்  கூட்டம் நடத்தினேன். பிறகு திருவாரூர் தங்கராசை வைத்து அதிகக் கூட்டங்களை நடத்தினேன். இதெல்லாம் நடந்த பிறகு 1974 இல் கொளத்தூரில் திராவிடர் கழகத்தின் கிளையைத் துவக்கினோம். மணியம்மையார்தான் துவக்கி வைத்தார்.




* உங்கள் வீட்டில் இதற்கு ஆதரவாக இருந்தார்களா?

கிராமத்தைப் பொருத்தவரை அவர்களுக்குக் கடவுளைப் பற்றிப் பெரிய கருத்தொன்றும் கிடையாது. கடவுள் மறுப்பும் கிடையாது. ஆண்டுக்கொரு முறைதான் திருவிழா சமயத்தில் கடவுளை பற்றி யோசிப்பார்கள். பொங்கல் வைப்பார்கள். கலைந்து விடுவார்கள். எங்கள் ஊருக்குப் பக்கத்து ஊரில் குறிப்பிட்ட மாதங்களில் மகாபாரதம் படிப்பார்கள். தெலுங்கில் நடக்கும். எங்கப்பாவும் அங்கு போய்  தெலுங்கில் மகாபாரதம் படித்திருக்கிறார். இருந்தும் என்னுடைய நடவடிக்கைகளுக்கு வீட்டில் எந்த எதிர்ப்பும் இல்லை. ஒரேயயாரு பார்ப்பனக் குடும்பம்  மட்டுமே  எங்கள்  ஊரில் இருந்தால் எதிர்ப்பு எதையும் சந்திக்கவில்லை. எங்கள் வீட்டிலிருந்து கடவுள் படங்களை எல்லாம் எடுத்து விட்டு ஒரு பெரியார் படம் ஒரு புத்தரின் படம் இரண்டையும் மாடங்களில் வைத்திருந்தோம்.
தி.க.வில் எண்பதுகளுக்கு முன் மாவட்டத் துணைச் செயலாளர் ஆனேன். அதன்பிறகு மாவட்டச் செயலாளராகி 1984 இல் மாநில அமைப்புச் செயலாளரானேன்.

* பெரியார் தலைமைப் பொறுப்பிலிருந்த  போதிருந்த வெளிப்படையான விமர்சனம், அவருக்குப் பிறகும் இயக்கத்தில் நீடித்ததா?

தலைமையேற்ற தொடக்க காலத்தில் கி.வீரமணி அம்மாதிரியான விமர்சனங்களை ஏற்றுக்கொண்டிருந்தார். அதிலும் எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் சட்டென்று பேசிவிடும் இயல்பு எனக்கு. பெரியார் ஆண்டு குறித்து கழகம் முடிவெடுத்தபோது அதை வெளிப்படையாகவே விமர்சித்திருக்கிறேன். பெரியார் ஒரு தத்துவ தலைவர். அதற்கு பிறகு யார் வந்தாலும் அவர்கள் எல்லாம் நிர்வாக தலைவர் மட்டுமே. பெரியாருக்குப் பிறகு கி.வீரமணி தலைமைப் பொறுப்புக்கு வந்தபோது எதிர்ப்பொன்றும் வரவில்லை. அதன் பிறகு நிறையக் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன.

* கடைசி காலத்தில் பெரியாரிடம் சலிப்பும், குழப்பமும் ஏற்பட்டதா?

சலிப்பெல்லாம் இல்லை. ‘துறவியாகி விடுவேனோ’ என்று ஒரேயயாரு கட்டுரையில் குறிப்பிட்டதை மட்டும்தான் சொல்கிறார்கள். அப்படியயல்லாம் இல்லை. அதற்கு பிறகு திருச்சியில் பெரியார் நிறுவனங்களில் நிறுவனர் நாள் விழா நடக்கிறது.  அதில் குன்றக்குடி அடிகளாரும் இருக்கிறார். அப்போதுகூட பேசுகிறார்: ‘சாமிகூட எங்க மடத்திற்கு வந்திருங்க என்று பேசினார். சாமி வேண்டுமென்றால் எங்கள் பேச்சைக் கேட்டு கருப்பு சட்டை போட்டுக்குமே தவிர நான் என்றைக்கும் காவி போடப் போறதில்லை’என்று வேடிக்கையாச்சொல்வார். உடல் நலத்தையும் வருத்திக்கொண்டு நான் இவ்வளவு சொல்லியும் மாற்றம் ஏற்படவில்லையே என்று  கசப்பாக அதைச் சொன்னார். அதன் பிறகும் வேகமான சுற்றுப் பயணமும் மக்களை சந்தித்ததும் நடந்தது.

* நீங்கள் திராவிடர் கழகத்தை விட்டு எப்பொது வெளியே வந்தீர்கள்?

திருவாரூர் தங்கராசு, ஆனைமுத்து ஆகியோர் முதலில் தி.க.லிருந்து வெளியேறுகிறார்கள். இராமகிருஷ்ணன் 1987‡இல் வருகிறார். 96‡இல் ஆனூர் ஜெகதீசன், விடுதலை  இராசேந்தரன் ஆகியோர் வருகிறார்கள். நான் 2000-இல் வெளியே வந்தேன்.

* இப்படி கட்சியை விட்டு வெளியேறுவதற்கான பொதுவான காரணங்கள் என்ன?

தலைமையின் போக்குதான் காரணம்.நான் சொல்லுவது தத்துவ தலைவரல்ல. நிர்வாக தலைவர். தலைமையைப் புகழ்தல் என்பது அதிகமாகப் போய்விட்டது. யார் புகழவில்லையோ அவர்களை எதிரிகள் மாதிரி பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். தொடக்க காலத்தில் தோழர் திருவாரூர் தங்கராசு, தோழர்    வீரமணி என்றுதான் சுவரோட்டிகள் அடித்தோம். அதற்குப் பிறகு  மானமிகு என்ற சொல்லைச் சொன்னார். மானமிகு கி. வீரமணி என்று போட்டோம். தமிழர் தலைவர் என்று மட்டுமே போடவேண்டும் என்று சொன்னார்கள். நாங்கள் அப்படிப்போடாமல்  மானமிகு என்று மட்டுமே போட்டோம். ஒரு கட்டத்தில் கூட்டங்களில் பேசும் போது  அவரது பெயரைக்கூட சொல்லகூடாது என்று சொன்னார்கள். அதற்கு கணவன் பெயரை மனைவி சொல்லகூடாது என்பதை மூடநம்பிக்கை என கண்டிக்கும்நாம், தலைவர் பெயரைத் தொண்டன் சொல்லகூடாது  என்பதில் என்ன நியாயம் இருக்கிறது? என்று கேட்டோம்.
அப்போது  ராஜ்குமார் கடத்தல் நடந்த நேரம். வீரப்பன் பிரச்சனை தொடர்பாக என்னை உளவுத்துறை அதிகாரிகள் சந்தித்தார்கள். என்னை மட்டுமல்ல எல்லையோரம் இருக்கிற நிறையப்பேரைப் பார்த்தார்கள். அந்த மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர்களைச் சந்தித்து ‘நீங்க ஏதாவது உதவி செய்யமுடியுமா?’என்று கேட்டார்கள். மாவட்ட கண்காணிப்பாளர் ஏழெட்டு பேரை சேலத்திற்கு வரச் சொல்லி பேசினார். நானும் போயிருந்தேன்.  ‘பார்க்கலாங்க, யோசிக்கிறோம்’ என்று சொன்னோம். இது நடந்த  நான்கைந்து நாட்களுக்கு பிறகு எங்க ஊர்த் தோழரின் திருமணத்திற்காக சென்னை வந்தேன். அன்றைக்கு வீரமணியிடம் வீரப்பன்  பிரச்சனை தொடர்பாக பேசினேன். அப்போது அவர் சொன்ன பதில்: ‘கருணாநிதி ஆட்சியைக் காப்பாற்ற தி.க .காரன்தான் கிடைத்தானா?’நான் சொன்னேன்: ‘நான் கருணாநிதி  ஆட்சி என்று  பார்க்கவில்லை. கர்நாடகத் தமிழர்களுக்குப் பாதிப்புகள் வரலாம்  என்பதால் மீட்பு நடவடிக்கையில் ஈடுபடலாம்’ என நினைத்தேன் என்றேன். நீங்க போய் ராஜ்குமாரை அழைத்து வந்துவிடுவீர்களா? என்று கேட்டார். ‘நான் ஆளையே பார்த்ததில்லை. இனிமேல் போகப் போகிறேன். போய் முயற்சி செய்யலாம் என்றிருக்கிறேன்’ என்றேன்.

அப்போது சமாதானப்  பேச்சு நடத்த நக்கீரன் கோபால் போய்கொண்டிருந்தார். ‘அதற்குத்தான் ஆயிரம் பேர் இருக்காங்களே’என்றார். அதிலிருந்து இதில் அவருக்கு விருப்பமில்லை என்று தெரிந்துகொண்டேன்.

ஆனால் எங்கள் பகுதியை பொறுத்தவரையில் 1992‡ இல் காவிரிப் பிரச்சனை  தொடர்பாக  கலவரம் நடந்தது. அதிகமான பாதிப்பு. எங்கள் பகுதியில் எப்பொது கலவரம் வெடிக்குமோ என்று பதற்றமாக இருந்தது. இன்னும் ராஜ்குமார் காட்டில் இருந்தால்  கலவரத்திற்கு வாய்ப்பிருக்கிறது என்று வீரமணி அவர்களிடம் சொன்னேன். ‘எனக்கு விருப்பமில்லை மணி’ என்றார்.

‘நீங்களெல்லாம் கட்சியை நடத்த வேண்டியவங்க  அப்படியயல்லாம் நீங்க போகக்கூடாது’என்றார்.‘நீங்க சொன்னதையயல்லாம் மனதில் வைத்திருக்கிறேன். நான் யோசனை பண்ணிப் பார்க்கிறேன்’  என்று சொன்னேன்.

‘யோசனையே  வேண்டாம் மணி. நீங்க போக வேண்டாம்’ என்றார். நான் விவாதம் செய்யாமல்  சரிங்க என்று சொல்லி வந்தேன். அங்கியிருந்து திரும்பும்போது காட்டிற்குப் போவது என்ற முடிவோடுதான் வந்தேன்.
அப்போது வாய்ப்பு எப்படி  இருக்கிறது  என்பதெல்லாம் தெரியாது. காவல்துறை அதிகாரியிடம்  ‘காட்டிற்குள் போய்ப் பேசிவிடுவேன். ஆனால் எப்படி காட்டுக்குள் போவது  என்று தெரியாது . எப்படி போவது யாரை பிடித்துப் போவது? ஒன்றும்  தெரியாது. திருச்சி  சிறையில்  முத்துகுமார் இருக்கிறார். அவரை சந்திக்க  வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள் அல்லது  நக்கீரன் கோபாலைக் கேட்டு அவங்க வழியாகத்தான்  போக வேண்டும் என்றேன்.  அதை ஏற்பாடு செய்து  தருகிறோம் என்று சொன்னார்கள். அதற்கு முன்பே  நக்கீரன் கோபால் வழியாக சந்திக்கக்கூடிய  வாய்ப்புக் கிடைத்துவிட்டது.  நான் போவதில் கட்சித் தலைமைக்கு விருப்பமில்லாததால் காட்டின் உள்ளே சென்றபோதுகூட   எந்தப் புகைப்படத்திலும் நான் நிற்க வில்லை. முதன்முறையாக போய் வருகிறோம். மூன்று நாட்கள் உள்ளே இருந்தோம் . எல்லாம் வி­யங்களையும் பேசி, ராஜ்குமாரை விடுவிக்க கேட்டோம். நான் சுகுமாரன், நெடுமாறன் அய்யா, கல்யாணி ஆகியோர் சென்றோம். நாங்கள் வெளியே வருவதற்கு முன்பே கொளத்தூர் மணிதான் இவர்களையயல்லாம் அழைத்துச் சென்றிருக்கிறார் என்று காலைக்கதிரில் எழுதி விட்டார்கள். நாங்கள் அக்டோபர் 17 ந்தேதிதான் வெளியே வருகிறோம். ஆனால் 16 ஆம் தேதி காலைக் கதிரில் செய்தி வெளிவந்திருக்கிறது. நான் தங்கியிருந்த வீட்டுக்காரர் எதையோ சொல்லியிருக்கிறார்.

கோவிந்தராஜ், ராஜ்குமாருக்கு மருமகன். மைத்துனர். பார்வதியம்மாவின் தம்பி. அவரை வெளியே கூட்டிக்கொண்டு வந்தோம். உடனே கலைஞரிடம் தெரிவித்த பிறகு அவரை பெங்களூருக்கு அனுப்பி விடுங்கள் என்று சொல்லி விட்டார். என்னோடு மேட்டூர் வரை வண்டியில் வருகிறார்கள். சண்முக சுந்தரமும் கூட வருகிறார். என்னங்க பத்திரிகை செய்தியால் உங்களுக்குத் தான் சிக்கல் என்றார் அவர். படம் எடுக்காமல் கவனமாக ஒதுங்கி விட்டோம். ஆனால் ஆசிரியர் பார்த்தால் கேட்பார் என்றேன்.

* ஆனால் அதற்கு முன்பே அவரிடம் தெரியப்படுத்தி விட்டுத் தான் காட்டிற்குள் சென்றீர்களா?

அவருக்குத் தெரியாது. வேண்டாமென்று பேசிய பின் நாங்கள் போவதற்கு ஒரு மாதம் ஆகிவிட்டது. அவரிடம் சொல்லாததால் புகைப்படம் எடுக்கும் போது கூட தனியாக நின்று கொள்வேன். எங்கேயும் என் பெயரெல்லாம் வேண்டாம் என்று தவிர்த்து விட்டேன்.

அடுத்த நாள்தான் மாலை முரசில் செய்தி வருகிறது. ஆசிரியர் திருச்சியில் இருக்கிறார். அங்கிருந்து தொலைபேசியில் என்னங்க மணி, மாலை முரசில் செய்தி வந்திருக்கிறதே என்று கேட்டார். உண்மைதாங்க என்றேன். கட்சி சொல்லியும் நீங்க போனீங்கன்னா என்ன அர்த்தம்? கட்சியில் இருக்க விருப்பமில்லை என்றுதானே அர்த்தம். நீங்க எழுதிக் கொடுத்திருக்க வேண்டும் என்றார்.

சரிங்க. இன்றைய தேதி போட்டு எழுதித் தரணுமா? பழைய தேதி போட்டு எழுதித் தரணுமா? என்று கேட்டேன். கிண்டலாகக் கேட்க வில்லை.  அவருக்குப் பாதிப்பு இருக்கக் கூடாது என்று உண்மையிலேயே கேட்டேன். இரண்டு மாதங்களுக்கு முன்பே எழுதிக் கொடுத்தது மாதிரி இருந்தால் அவருக்குச் சிக்கல் இருக்காதில்லையா? அது உங்கள் இஷ்டம் என்றார். அந்தக் கடிதத்தை எங்கே அனுப்ப வேண்டும் என்று கேட்டேன். திடலுக்கு அனுப்பி விடுங்கள் என்றார். அதற்குப் பிறகு அவரிடம் பேசவில்லை.
ஐ நீங்கள் எழுதிய ராஜினாமா கடிதத்தை திராவிடர் கழகத்தில் உடனே ஏற்றுக் கொண்டார்களா?



நான் தலைமைக்கு எழுதிய எல்லா கடிதங்களிலும் ஒரு நகலை மாவட்டத் தலைவர் பொத்தனூர் சண்முகத்திற்கும் அனுப்பிவிடுவேன். அவரிடம், அய்யா விலகல் கடிதம் எழுதச் சொல்லியிருக்கிறார் என்றேன்.என்னைக் கடிதத்தோடு வந்து பாருங்கள் என்றார். மறுநாள் அவரைச் சந்தித்தேன். என் கருத்துக்களை யயல்லாம் எழுதிவிட்டு கடைசியில் வீரப்பன் பிரச்சனையை திராவிடர் கழகத் தலைவர் என்ற நிலையிலிருந்து பார்த்து விட்டீர்கள் என்று கருதுகிறேன் என்று எழுதியிருந்தேன். இந்தக் கடிதத்தைக் கொடுக்க வேண்டாம் என்றார் மாவட்டத் தலைவர். பிறகு அவரிடமே கடிதத்தைக் கொடுத்துவிட்டேன்.

*வீரப்பன் பிரச்சினை தொடர்பாக வேறெதுவும் சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருந்தா?

வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரால்அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மாநாடுகள் நடத்தினோம். அதற்கு முன்பு இரண்டு மாநாடுகள் நடத்தியிருக்கிறோம். பா.ம.க. தலைவர் ஜி.கே மணி மேட்டூர் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர்கள், கர்நாடக பி.யூசி.எல்.ஜச் சேர்ந்தவர்கள் என எல்லோரையும் அழைத்து மாநாடுகள் நடத்தியிருக்கிறோம்.

அதிரடிப்படை அத்துமீறல் விசாரிக்கும் சதாசிவா ஆணையத்திற்கு உயர்நீதிமன்றத்தில் கர்நாடக அதிரடிப்படையினர்  தடை வாங்கிவிட்டார்கள். தடையை நீக்குவதற்கான வழக்கில் அவர்கள் தரப்பில் ஒரு வழக்கறிஞரைகூட நியமிக்கவில்லை. இதன் காரணமாக ஏழெட்டு மாதங்கள் தள்ளிப்போகிறது. வழக்கு பாதிக்ப்பட்ட மக்கள் தரப்பிலிருந்து ஒரு மனு போட்டு, நாங்களாக ஒரு வழக்கறிஞரை நியமித்து வாதாடினோம். அதனால் தேசிய மனித உரிமை ஆணையத்தை கண்டித்து ஒரு மாநாடு போட்டோம்.

‘சட்ட தினம்’ நவம் 26. அன்றைக்குத்தான் மாநாடு என முதலிலேயே தீர்மானித்தோம். கிருஷ்ணய்யர், பாலகோபால் ஆகியோர் வருகிறோம் என்று சொல்லியிருந்தார்கள். அதே நாளில் திருச்சியில் திராவிட கழகத்தின் இளைஞரணி மாநாடு நடக்கிறது. யாரோ அரை குறையாக சொல்ல போட்டி மாநாடு நடத்துகிறார்கள். அதில் யாரும் கலந்துக்கொள்ளக்கூடாது என்று வீரமணி அறிக்கை வெளியிடுகிறார். இந்த அறிக்கைக்குப் பிறகு தான் நான் கட்சியில் இல்லை என்பது பலருக்குத் தெரியும். சேலம், தருமபுரி, ஈரோடு, திண்டுக்கல் மாவட்டத் தோழர்கள் பலர் திருச்சி மாநாட்டிற்குச் செல்லவில்லை. இரண்டாவது முறை ராஜ்குமார் மீட்பதற்காக காட்டிற்குள் செல்லும்போது நான் கழகத்தில் இல்லை விலக்கிவிட்டார்கள். நான் ராஜ்குமார் மீட்புக் குழுவில் இருக்கிறேன் என்பது கலைஞரைச் சந்திக்கும்போது தான் தெரியும். அவரைச் சந்திக்கப் போகும்போது நெடுமாறன் அய்யா சொல்லுகிறார், இந்த நிலையிலாவது குழுவில் நீங்களும் இருந்தீர்கள் என்பதை வெளிப்படுத்திக் கொள்ளுங்கள், இது உங்களுக்கும் நல்லது என்றார். எல்லோருக்கும் கலைஞர் பொன்னாடை போர்த்தினார். அது பற்றி ஆசிரியர் எழுதுகிறார், ‘பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. மஞ்சள் துண்டை போய் வாங்கிக் கொள்கிறார்கள் என்று’ அப்போது தான் தோழர்களுக்கு ஓரளவிற்கு தெரியவந்தது.

கட்சியை விட்டு வெளியே வந்தவுடன் என்ன செய்வதென்று புரியவில்லை. அமைப்பு ஏதும் இல்லாமலேயே செய்தோம். பாதிக்கப்பட்ட  மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற  எண்ணம்தான் இருந்தது. பழ. நெடுமாறன், மனித நேயப்பயணம் மேற்கொண்டார். அதில் கலந்துகொண்டு பேசினேன். பிறகு பெரியார் சிலை திறப்புவிழாவை கோவை இராமகிருஷ்ணன் நடத்தினார். அவ்விழாவின்போது வழக்கறிஞர் துரைசாமிதான் தனித்தனியாக இருந்து என்ன செய்ய போகிறீர்கள்? என்று கேட்டார். ‘இந்தப்பக்கம் அருந்தியர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களில் தாழ்த்தப்பட்டவர்களாக வாழ்க்கிறார்கள். எந்த உரிமையுமில்லை நான் அவர்களோடு சேர்ந்து வேலை செய்யவேண்டும் என்றிருக்கிறேன் என்று சொன்னேன். ஆதித் தமிழர் பேரவையோடு சேர்ந்து நானும் பணியாற்றலாம் என்று நினைத்தேன்’. நீங்கள் ஏன் ஒன்றாகச் சேர்ந்து செயல்படக்கூடாது? என்றார் பிறகு விடுதலை இராசேந்தினிடம் ஒரு முடிவுக்கு வந்தோம்.

அப்போதைய குழலில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில்  இருந்தது. இங்கே தி.மு.க.வும், அதி.மு.க.வும் மாறி மாறி ஆதரித்து வலுவாக வந்துக்கொண்டிருக்கிற நிலை. இந்த நிலையில் வீரியமாக செயல்படக்கூடிய பெரியார் இயக்கம் கட்டாயத் தேவையாக இருக்கிறது. நம்மிடம் சிறுசிறு வேறுபாடுகள் இருந்தாலும் அதை கருதாது ஒன்றுபடவேண்டிய கட்டாயமிருக்கிறது. நாம் ஒரு புதுப்பண்போடு ஒர் அமைப்பை கொண்டு போக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.






*அந்த அமைப்பில் யார் யார் இருந்தார்கள்?

திராவிடர் கழகத்திலிருந்து விலகிய நாங்கள், தமிழ் நாடு திராவிடர் கழகமாக  இயங்கிய திருவாரூர் தங்கராசு, கோவை இராமகிருஷ்ணன், பெரியார் திராவிடர் கழகமாக இயங்கிய ஆனூர் ஜெகதீசன், விடுதலை இராசேந்திரன் புதுச்சேரியில் இராவணன் பகுத்தறிவு நூலகமாக இயங்கிய லோகு அய்யப்பன் அவருடன் தோழர்களும், தூத்துக்குடியில் பெரியார் பாசறையாக இயங்கிய அனைவரும் இணைந்து 2001 ‡ ஜுன் 13‡இல் ‘தந்தை பெரியார்திராவிடர் கழகம்’ தொடங்கினோம்.

* வீரப்பன் பிரச்சனையில் ஈடுபட்டபோது அரசு தரப்பில் ஏதும் நடவடிக்கை எடுக்கமாட்டோம் என்ற உறுதியைக் கொடுத்தார்களா?

சுகுமாரன், கல்யாணி இருவருக்கும் கொடுத்தார்கள். நானும் நெடுமாறன் அய்யாவும் அப்படி எந்த உறுதி மொழியையும் வாங்கவில்லை. வேண்டாம் என்று சொல்லிவிட்டோம். இராஜ்குமார் தொடர்பாக வழக்குத் தொடுக்கமாட்டார்கள், அதைப்பற்றி விசாரிக்கமாட்டார்கள் அவ்வளவுதான் அந்த உறுதி மொழியே தவிர எந்த வழக்கும் போடமாட்டார்கள் என்பதல்ல. என்மேல் ஒரு வழக்கு போட்டார்கள்.

2001 ஜூன் மாதம் 13‡ஆம் நாள் அமைப்பைத் தொடங்குகிறோம். எல்லா மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செல்கிறோம். கோவையில் நிருபர்கள் என்னிடம் கேள்வி கேட்கிறார்கள். தேவாரம் பற்றியும் கேட்டார்கள். சதாசிவா  ஆணையம் விசாரணை முடிகிற வரையாவது அவர் இங்கே இருக்கூடாது. அவருக்கு எதிராகப் பேசுவதற்கு மக்கள் பயப்படுவார்கள் என்று சொன்னோம். அடுத்து வீரப்பன் சிங்கப்பூர் போய்விட்டார் என்கிறார்களே? என்று கேட்டார்கள். முதல்ல சிலோன் போய்விட்டார் என்று சொன்னீங்கள். இப்ப சிங்கப்பூர். அவர் காட்டில்தான்  இருக்கிறார் என்றேன். மறுநாள் பத்திரிக்கையில் வீரப்பன் காட்டில் இருக்கிறார். கொளத்தூர் மணி பேட்டி என்று வருகிறது. இந்த பேட்டியை வைத்து வீரப்பன் காட்டில் இருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரிந்திருந்தும் ஏன் எங்களுக்குச் சொல்லவில்லை என்று வழக்குப் போட்டார்கள். இன்னும் வழக்கு நடந்து வருகிறது. அதற்காக என்னைக் கைது செய்தார்கள். பதினெட்டு நாட்களுக்குப் பிறகு பிணையில் வந்தேன்.

மார்ச் 13-இல் விசாரணையை ஆணையம் ஆரம்பிக்கிறது. ‘நாங்கள் துணை நிற்போம். நீங்கள் துணிச்சலாக உண்மையைச் சொல்லுங்கள்’ என்று துண்டறிக்கைகள் வெளியிட்டு பாதிக்கப்பட்ட மக்களிடம் விநியோகித்தோம். மார்ச்சு 8 ஆம் தேதி  என்னை கைது செய்தார்கள். வீரப்பனுக்கு வெடிமருந்து கொடுக்கப் போகும்போது காட்டில் என்னைச் சுற்றி வளைத்தாக வழக்கு. அதில் ஓராண்டு சிறையில் இருந்தேன். சிவசுப்ரமணியன் போகும் போது  வெடிமருந்துகளோடு நானும் போனேன் என்றும் இப்படி ஆறு வழக்குகளில் என்னை சேர்த்தார்கள். 1993‡ல் நடந்த முடிந்த வழக்கில் ஒருவரிடம்  ‘கொளத்தூர் மணிதான் வெடிமருந்துகள் வாங்கிகொடுத்தார்’ என்று ஒப்புதல் வாக்குமூலம் வாங்கி அதிலும் என்னைக் கைது செய்தார்கள். இப்படி 13 மாதங்கள் கர்நாடகச் சிறையில் இருந்தேன்.

* அதிகமாக அக்கறையை வீரப்பன் விவகாரத்தில் காட்டுகிறவர்கள் தமிழ்த் தேசியவாதிகள் என்ற பொதுவான விமர்சனம் இருக்கிறது. கொலை, கொள்ளையடித்த ஒருவருடன் சேர்ந்து தேசியவாதிகள் இயங்குவது குறித்து குற்றச்சாட்டும் இருந்தது. இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

வீரப்பனுக்கு தமிழ்த் தேசிய சிந்தனையயல்லாம் கிடையாது. முமுமை பெறாத ஏதோ ஒரு சிந்தனை மட்டுமே இருந்தது. கர்நாடகத்தில் தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்கிற அளவுக்குதான் தெரியும் . இராமாபுரம் காவல் நிலையத்தை தாக்கி ஆயுதங்களைக் கைப்பற்றுகிறார்.  ‘காவிரி நீர் விடலைல்ல. பார்த்தியா இராமாபுரம் போலீஸ் ஸ்டே­ன்ல ரத்து ஆறு ஓட வைச்சுட்டேன்’ என்று ஒரு பேட்டியில் கூடச் சொல்லியிருக்கிறார்.
அதற்குப் பிறகுதான் தமிழ்த் தேசிய சிந்தனையுள்ள இளைஞர்கள் போய்ச் சேருகிறார்கள். அவரை அரசியல்படுத்த முயற்சி செய்கிறார்கள். அங்கு மாறன் போவதற்கு முன்பே தீட்டப்பட்ட திட்டம் ராஜ்குமாரைக் கடத்துவது. பழ. நெடுமாறன் மேல் வீரப்பனுக்கு ஒரு மரியாதை உண்டு. விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் போய்ப் பார்க்க வேண்டும். பிரபாகரனைச் சந்திக்கவேண்டும் என்ற ஆசையயல்லாம் அவருக்கு இருந்திருக்கிறது. மாறனெல்லாம் சேர்ந்து யாரைக் கூப்பிடலாம் என்று திட்டமிட்டு நெடுமாறன் அய்யா, பாலகோபால், கல்யாணி , சுகுமாரன் என்று சொல்லியிருக்கிறார்கள்.

காட்டிற்குள்ள தமிழ்ச் தேசிய சிந்தனையுள்ளவர்கள் இருந்ததால் மனித உரிமை அமைப்புகளில் ஈடுபட்டுள்ளவர்களை  அழைக்கிறார்கள். இவர்கள் சொன்னால் உறுதிமொழிகளை நம்பலாம் என்று நினைக்கிறார்கள். அவர் முன்வைத்த கோரிக்கைகள் தான். காவிரிநீர்ப்பிரச்சனை, தேயிலைத் தோட்டம்  தொழிலாளர் பிரச்சனை  என்று பல கோரிக்கைகளை முன் வைக்கிறார் வீரப்பன்.

காவிரிநீர்ப் பிரச்சனையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வெங்கடாசலா ஆணையம் என்று அமைந்திருந்தார்கள். விசாரணை நடக்காமல் இருந்தது. இப்போது நடத்தி அவர்களுக்கு இழப்பீடு கொடுத்துவிட்டார்கள். இவையயல்லாம் மக்கள் மத்தியில் பிரபலமானதே வீரப்பன் சொன்ன பிறகுதான்.

* வீரப்பன் மரணம் குறித்து சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருக்கிறதே? இதை அமைப்பு எப்படி எடுத்துக்  கொள்கிறது?

வீரப்பன் இறந்து விட்டார். அவ்வளவுதான். இது விசாரணையில் இருக்கிறது. உயிரோடு பிடித்து நீதி மன்றத்தில் நிறுத்தியிருக்கலாம். பல உண்மைகள் வெளிவந்திருக்கும். உயிருடன் பிடிப்பதற்கான வாய்ப்பிருந்ததாக நாங்கள் கருதுகிறோம். பிடித்தபோது வண்டியில் ஏற்றியதாகச் சொல்கிறார்கள். வீரப்பன் சுடப்பட்டதைக்கூட Custodial killing என்றுதான் சொல்லவேண்டும். வீரப்பன் இறந்தது குறித்து சொல்கிற செய்திகள் பற்றி திட்டவட்டமான கருத்துக்கள் இல்லை. வாய்வழியாகத்தான் வி­ம் கொடுத்துக் கொன்றதாகச் செய்திகள் உலவுகின்றன. முழு ஆதாரம் இல்லாமல் எதையும் சொல்ல முடியாது. எங்களைக் கேட்டால்கூட எப்படி  செத்தார் என்று தெரியவில்லை என்று தான் சொல்கிறோம்.

பெரியார் தி.க வேலைகள் எல்லாம் வீரப்பன் பணத்தில்தான் தீவிரமாக நடக்கிறது என்று முன்பு தி.கவினர் பேசினார்கள். அதற்கு நான் வேடிக்கையாகப் பதில் சொன்னேன். பரவாயில்லை, வீரப்பன் பணம் கொடுத்ததால்கூட கொளத்தூர் மணி அதை பெரியார் இயக்கம் வளர்வதற்குதான் பயன்படுத்துவான். பெரியாரே பணம் கொடுத்தும் கூட கட்சிக்குப் கட்சிக்குப் பயன்படுத்துவதில்லை. அதுதான் அவங்கமேல் குற்றச்சாட்டு. அதை முதலில் செய்யச் சொல்லுங்கள் என்று சொன்னேன்.  இதுமாதிரி எங்களைப் பற்றி நிறையச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நாங்க  சொன்ன ஒரே பதிலும் உண்மையான பதிலும் அதுதான். எங்கள் வழியாக பணயத் தொகை வீரப்பனுக்கு கொடுக்கப்படவில்லை. எங்கள் முன்னிலையிலும் எவராலும் கொடுக்கப்படவில்லை. அதை நாங்கள்  அழுத்தம் திருத்தமாகச் சொல்லமுடியும். அதைப்பற்றி எங்களுக்குத் தெரியாது. தெரியாத வி­யங்கள் பற்றி கருத்துச்சொல்ல முடியாது.  எங்கள் முன்னால் யாரும் கொடுக்கவில்லை. தமிழ் விடுதலை இயக்கங்களையும் பார்ப்பன எதிர்ப்பு இயக்கங்களையும் அசிங்கப்படுத்தவேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டு சில பத்திரிக்கைகள் இது பற்றி மிகைப்படுத்தி எழுதுகின்றன.

*ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான ஒரு தேவையாக பெரியார் இருந்தார். இப்போது பல இயக்கங்கள் வெவ்வேறு சாதிய அடையாளங்களோடு இயங்கி வருகின்றன.அதே மாதிரி தேவையும் பெரியாரை அணுகக்கூடிய குழுலும் இப்போது இருக்கிறதா?

முன்பைவிட குழல் மாறியிருக்கிறது என்று சொல்லாம் பெரியார் வாழ்ந்த காலத்தில் சாதிச் சங்கங்கள் இருந்தன. ஆனால் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதோடு நின்றுவிடாமல் சாதி ஒழிப்பிற்கு துனை நின்றன. இப்போதைய சாதிச் சங்கங்களுக்கு உரிமை கேட்பது நோக்கமல்ல. அதிலிருக்கிற திடீர் பணக்காரரோ, அரசியல் ஆசை உள்ளவரோ மக்களைத் திரட்டி தங்களின் சுயநலத்திற்குப் பயன்படுத்தக்கூடிய நிலைமை வந்துவிட்டது. இப்போதைய சங்கங்கள் தங்கள் நன்மைக்காக தொடர்ந்து சாதிகளாக பிரிந்திருப்பது நல்லது என்று கருதுகிறார்கள். முன்பைவிட மிகச் சிக்கலான குழல் இது.

அதோடு தனியார்மயமாக்கல் உலகமயமாக்கல் என புதிய போக்குகள் வந்து கொண்டிருக்கின்றன. பார்ப்பனியத்திற்கும் இந்துத்துவத்திற்கும் எதிராக செயல்பட்ட திராவிட இயக்கங்கள் பி.ஜே.பியை வளர்த்துவிடுகின்றன. தமிழக மக்கள் இதுவரை என்னவென்றே தெரியாத இந்துத்துவ சிந்தனையை வளர்த்திருக்கிறார்கள். திராவிடர் கழகம் என்பது பெரியார் பேசிய பகுத்தறிவு, சாதி ஒழிப்பு என்பதை பேசிக்கொண்டிருந்தாலும் கூட அதை வீரியமாக எடுத்துச் செல்ல வில்லை. தந்தை பெரியார் திராவிடர் கழகம் மிகத் தீவிரமாக எடுத்துப் போக வேண்டும் என்று நினைக்கிறோம். அதற்கான தேவை அதிகமாக இருக்கிறது. பெரியாரைப் பற்றி அக்கறை கொள்ளாத பொதுவிடமை இயக்கங்கள் கூட பெரியாரியல் தேவை என்பதை இப்போது உணருகின்றன.

* பெரியார் சாதி ஒழிப்பு , தீண்டாமை ஒழிப்பு  மாநாடுகள் நடத்தியிருக்கிறார்கள். மார்க்சிஸ்ட் கட்சி கோயில் நுழைவு போராட்டத்தை நடத்தியது. ம.க.இ.கவும் அதுபோல நடத்தியது. ஏன் தொடர்ச்சியாக அதுபோன்ற மாநாடுகளை பெரியார் இயக்கங்கள் நிகழ்த்தவில்லை?

பெரியார் இயக்கங்கள் நடத்தும் போராட்டங்களை மாநாடுகளைப் பதிவு செய்ய  பத்திரிக்கைகளின் ஆதரவு இல்லை இருக்கிற பத்திரிக்கைகளின் முதலாளிகள் பெரியார் இயக்கங்களுக்கு எதிராக இருக்கிறார்கள்.  அதிகமாகச் செய்தியை வெளியிடுவதில்லை. எங்களைப் பொறுத்த வரையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். கடந்த ஜனவரி மாதம் காஞ்சிபுரத்தில் கருவறை நுழைவுப் போராட்டம் நடத்தி 865 பேர் கைதானோம். படித்த வெகுஜன மக்களுக்கு எடுத்துச் செல்வது மாதிரி எங்களிடம் போதிய தொடர்புச் சாதனங்கள் இல்லை. திண்ணியம் பிரச்சனை பற்றி புதுவையில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினோம். சங்கராச்சாரியாரை கைது செய்வதற்கு முன்பே அவரை கைது செய்யவேண்டும் என்று துண்டறிக்கை வெளியிட்டோம். ஆர்ப்பாட்டம் நடத்தினோம். பிறகுதான் கைதே நடந்தது.  அறநிலையத் துறை அதிகாரியாக பெண்களும் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தோம். இன்று 23 பெண்கள் அதிகாரிகளாக பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். நாங்கள் தான் செய்தோம். ஆனால் அதை விளம்பரப் படுத்திக் கொள்ளத் தெரியவில்லை.



பண்டிதர் அயோத்திதாசர்

காலச்சுவடு இரவிக்குமார்

*தலித்துகளுக்கு மத்தியில் பெரியார் பற்றிய விமர்சனக் குரல் கடுமையாக எழுந்திருக்கிறது. அயோத்திதாசர் உட்பட பலரை பெரியார் புறக்கணித்திருக்கிறார் என்று கடந்த சில ஆண்டுகளாக விமர்சனம் வைக்கப்படுகிறது. இது குறித்து பெரியார் இயக்கம் சார்பில் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

இரவிக்குமார் என்ற ஒரேயாரு நபரால் அந்தப் பிரச்சாரம் முன்னெ டுக்கப்பட்டது.  இன்னொரு பக்கம் விமர்சனம் செய்தவர் ஒர் அரசுஅதிகாரி.  இரவிக்குமாருக்கு பெரியாரைப் பற்றி  நன்றாகத் தெரியும். அந்தம்மாவிற்கு பெரியாரைப் பற்றி எதுவும் தெரியாது. பத்தாண்டுகளுக்கு முன்பு இப்படியயல்லாம் கேள்விகள் எழுந்தபோது பெரியார் அப்படிப்பட்டவரல்ல என்று பதில் சொன்ன அதே இரவிக்குமார்தான் இப்போது எழுத ஆரம்பித்திருக்கிறார். விடுதலைச் சிறுத்தைகளின் ‘தாய் மண்’ இதழ் அவருடைய எழுத்தை எந்த விளக்கமும் இல்லாமல் வெளியிடுகிறது. இயக்கத்திற்கே அந்தக் கருத்து இருப்பதைப் போல வந்துவிடுகிறது. இப்போது புரிந்து கொண்டு அதை நிறுத்திவிட்டார்கள். சுதாரித்துக் கொண்டார்கள் என்று சொல்லலாம்.  பெரியார் அயோத்திதாசர் நூல்களைப் பற்றி குடியரசில் விளம்பரப்படுத்தியிருக்கிறார். இருந்தும் எதையும் படிக்காதவர்கள் அப்படிச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இரட்டை வாக்குரிமை மாநாட்டில் ரவிக்குமார், குத்தூசி குருசாமிதான் கட்டுரை எழுதினார். பெரியார் எழுதவில்லை. பெரியார் வெளிநாட்டில் இருந்தார் என்று பேசியிருக்கிறார். அங்கியிருந்து பெரியார் அம்பேத்கருக்கு மிக நீண்ட தந்தி கொடுத்தார். அது ‘குடியரசு’ பத்திரிக்கையில் பதிவாகியிருக்கிறது. செய்திகளை விமர்சனமாக எழுதுவதைவிட வேண்டுமென்றே திரித்து எழுதுகிறார்கள். எதிர்காலத்தில் இந்தப்போக்கு இருக்காது என்று நம்புகிறோம்.

* மொழியுணர்வைப் பொறுத்தவரை இருவேறு விதமான முரண்பட்ட கருத்துக்களை பெரியாரிடம் இருந்த தால்தானே பலர் அந்த முடிச்சுகளைத் தங்களுக்குச் சாதகமாகச் சுட்டிக்காட்டுகிறார்கள்?

பெரியாருக்கு தமிழின்மீது அக்கறையில்லை என்பதுதான் அவரை எதிர்ப்பவர்கள் வைக்கும் வாதம். தமிழின் மீது ஈடுபாடு இல்லாமலா எழுத்துச் சீர்த்திருத்தைச் கொண்டு வந்தார்? மக்களுக்கான மொழியாக இல்லாமல், பழங்காலத்தையும், மூடநம்பிக்கைகளையும் சுமக்கிற மொழியாக இருக்கிறதே என்கிற இருக்கிறதே என்கிற ஆதங்கம் அவருக்கிருந்தது. திருக்குறளைப் பரப்ப  மாநாடு நடத்தினார். கலாசாரப் போராட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் மொழிப் போராட்டத்தை அவர் பார்த்தார் . இந்தி எதிர்ப்புணர்வை 1926 களிலேயே அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.

* சமீபத்தில் வெளிவந்திருக்கிற ‘தமிழ் ஆட்சிமொழி’ குறித்த நூலில்கூட இந்திக்கு மாற்றாக ஆங்கிலத்தை பெரியார் முன்னிறுத்தியதால்தான் திராவிட இயக்கங்கள் ஆங்கிலத்தை உயர்த்திப் பிடித்தன என்கிற குற்றச்சாட்டு பதிவாகி யிருக்கிறதே?

‘அறிவியல் தமிழில் இல்லை. முற்போக்கு சிந்தனைகள் அனைத்தும் ஆங்கில மொழி வாயிலாகத்தான் நம்மை வந்தடைந்திருக்கின்றன. தமிழில் எதைக் கொண்டு வந்தீர்கள்’ என்கிற கேள்வியைக் கேட்டார் பெரியார். பார்ப்பனர்கள் மட்டும் ஆங்கிலம் படித்து உயர் பொறுப்புகளைப் பிடித்துக்  கொண்டிருந்தனர்.  ஆங்கிலம் படித்துத் தமிழர்களும் உயரட்டும் என்கிற அர்த்ததில்அவர் ஒரு கட்டத்தில் சொன்னார். ‘ராஜா வேண்டாம். குடியரசுதான் வேண்டும் என்கிற அறிவு சமதர்மம் வேண்டும். சனாதானம் ஓழியவேண்டும். என்கிற அறிவு ஆணும் பெண்ணும் சமம் என்கிறஅறிவு அரசியல், பொருளாதார முன்னேற்ற அறிவுக் கருத்துக் களையும் ஆங்கில மொழிதான் நமக்குத் தந்தது’ என்று சொல்கிற பெரியார் ஆங்கிலத்தை பகுத்தறிவுக்கு உகந்த மொழியாகப் பார்க்கிறார். ஆனால் அவரே மொழியைப் பற்றிப் பின்னால் சொன்னவையயல்லாம் மறைக்கப்பட்டுவிட்டன. 1972 இல் அதே பெரியார் இப்படிச் சொல்கிறார். ‘மொழியுணர்ச்சி இல்லாதவர்களுக்கு  நாட்டுணர்ச்சியோ நாட்டு நினைவோ எப்படி வரும் ?’. ஆனால் பெரியார் சொன்ன சூழலைப் பார்க்கவேண்டும்.
தாய்மொழி பயிற்று மொழியாக இருக்கவேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை. வெளியுறவுக்கான தொடர்பு மொழியாக மட்டுமே ஆங்கிலம் இருக்கலாம்.

* இலங்கையில் மருத்துவம் பொறியியலைத் தமிழ் வழியாகப் படிப்பது சாத்தியமாயிருக்கிறதே? அதே மாதிரி இங்கு முப்பத்தைந்து வருடங்களாக திராவிட இயக்கங்கள் ஆட்சிப் பொறுப்பிலிருந்தும் செயல்படுத்த முடியவில்லையே?

இங்கு ஆட்சிப் பொறுப்பிலிருந்து இருக்கிற திராவிட இயக்கங்கள் பதில் சொல்லவேண்டிய கேள்வி இது. இவையயல்லாம் ஆட்சிக்கு வருகிறவரை பெரியார் வழியைப் பற்றியயல்லாம் பேசுவார்கள். ஆட்சிக்கு வந்த பின்னால் அதைத் தக்கவைக்க  என்ன செய்யலாம் என்பதே அவர்களது கொள்கையாகிவிட்டது. பொது மக்களின் எழுச்சிதான் அதைச் செயல்படுத்த வைக்கும், இந்த உணர்வை மக்களிடம் எடுத்துக்கொண்டு போகவேண்டிய பொறுப்பு இங்கு பெரியாரியச் சிந்தனைகளைப் பேசுகிற இயக்கங்களுக்கு இருக்கிறது.

* இன்னொரு விதத்தில் பார்த்தால் திராவிடர் சொல்லுக்கே இன்றைக்கு  அதற்குரிய பொருளிருக்கிறதா?

அது தவறாக விளக்கம் கொடுக்கப்படுகிறது. பெரியார் திராவிடர் என்கிற சொல்லை சமுதாய விடுதலைக்காகப் பயன்படுத்தினார். அரசியலைப்பற்றிப் பேசும்போது தமிழ்நாடு என்றுதான் பேசியிருக்கிறார். தமிழ்நாட்டு விடுதலையைத்தான் பேசியிருக்கிறார். மொழிவழி மாநிலங்கள் பிரிந்ததும் ‘திராவிடநாடு திராவிடருக்கே’ கோரிக்கையை விட்டுவிட்டார். ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்றுதான் பிறகு சொன்னார். அதன் பிறகு திராவிடம் பற்றிய பேசுகிறவர்களையயல்லாம் விமர்சித்தார். தேசிய சுய நிர்ணய உரிமை என்கிற கருத்தாக்கத்துடன் தமிழ்நாடு விடுதலையைப் பற்றி அவர் பேசவில்லை யயன்றாலும் சாதிய , சமுதாய விடுதலையைத்தான்  அவர் எதிர்ப்பார்தார். சென்னை மாகாணத்தை தான் திராவிடநாடு என்று சொன்னார். அண்ணா சொன்ன திராவிட நாட்டின் எல்லை. வேறு அதனால் அதை வைத்துக் குழப்பிக் கொள்ள வேண்டியதில்லை.

* இந்தியாவில் பல மாநிலங்களில் சுயநிர்ணய உரிமை சார்ந்த குரல்கள் கேட்டாலும், தமிழகத்திலிருந்து எழும் குரலுக்கு மட்டும் ஈழத்துடன் தொடர்புடுத்திப் பார்க்கக்கூடிய போக்கு நீடிக்கிறது. இந்தப்பார்வை இந்த இயக்கங்களின் செயல்பாட்டை எந்த அளவுக்கு பாதிக்கிறது?

ஏற்கனவே  தமிழ்நாட்டில் உள்ள மக்கள் வடவர் எதிர்ப்புடன், சமஸ்கிருத, இந்தி எதிர்ப்புடன் இருக்கிறார்கள். இந்த உணர்வுடன் ஈழ விடுதலைக்கு ஆதரவான உணர்வு இணைந்தால் ஏற்படும் விளைவைப் பற்றிப் பயப்படுகிறார்கள். அதனால் தமிழ்ச் தேசியம் பேசக்கூடிய குழுக்களின் மீது வெவ்வேறு விதமான அடக்குமுறைகளைக் கையாள்கிறார்கள்.




* புலிகள் இயக்கத்துடன் உங்களுக்கு எப்போது தொடர்பு ஏற்பட்டது?

துவக்கத்தில் பயிற்சி பெறுவதற்காக தமிழகத்தில் இடத்தைத் தேடிக்கொண்டிருந்தபோது கொளத்தூரில் எங்கள் தோட்டத்தை வந்து பார்த்தார்கள். புலிகள் இயக்கத்தின் முன்னோடிகள் மூன்று ஆண்டு காலம் எங்களுடைய தோட்டத்தில் பயிற்சி நடந்தது. சுமார் இரண்டாயிரம் பேர் அங்கு பயிற்சி எடுத்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.  அப்போது அவர்களுக்குப் போதுமான பொருளாதார வசதியில்லாத நிலையில் நன்கொடை திரட்டி அவர்களுக்கு உதவினோம். 1984 ஜனவரியிலிருந்து 1986 நவம்பர் வரை முகாம்கள் நடந்தன. தம்பி பிரபாகரன் வரை பலர் தங்கியிருந்தார்கள். அப்போதிலிருந்து அவர்களுடைய தொடர்பு உண்டானது.




*பிறகு தமிழ் ஈழப் பகுதிக்குப் போய் வந்தீர்களே?

அதன்பிறகு 1989 இல் பிரபாகரன் சுடப்பட்டதாக வதந்திகள் பரவியிருந்தன. வைகோ  போய்விட்டு வந்த பிறகு ஈழத்திற்கு நான் போனேன். 89 இறுதிக்குள் காட்டுப் பகுதிக்குள் தங்களுடைய இயக்கத்திற்கு வலுவான  அடித்தளத்தை அமைத்துவிட்டார்கள். நகரத்தில் போராட்டத்தில் இறங்குமுன்பு தங்களுடைய வளர்ச்சியைத் தங்களுடைய ஆதரவாளர்களுக்குக் காட்டினால் நல்லது என்ற எண்ணம் அவர்களுக்கு  இருந்தது. அதனால் என்னை அழைத்திருந்தார்கள். அழைப்பையயாட்டி நான் அங்கு போனேன். தொடக்கக்காலத்தில் ஒரேயயாரு எஸ்.எம்.ஜி ரகத் துப்பாக்கியை வைத்திருந்தபோதிலிருந்து எனக்கு அவர்களுடன் அறிமுகம் உண்டு. நான் அங்கு போனபோது நவீன ஆயுதங்களைக் கையாண்டு கொண்டிருந்ததால் எஸ்.எல் ஆர். துப்பாக்கியையே தலைகீழாகக் கவிழ்த்து தொப்பியோடு நினைவிடங்களில் வைத்திருந்தார்கள்.  ஒரு மாறுதலான சூழ்நிலையை உணரமுடிந்தது. அப்போது பிரபாகரனுடன் நானும்  எடுத்துக்கொண்ட புகைப்படம்தான் பிரபாகரன்  உயிரோடு இருப்பதற்கான ஆதாரமாகப் பலரால் கருதப்பட்டது. 15 நாட்கள் வரை அங்கு தங்கியிருந்தேன். தமிழகத்திலுள்ள பத்திரிகைகளில் அந்தச் செய்திகள் வெளிவந்தன. உளவு அமைப்பினர் எங்களுடைய நடவடிக்கைகளைக் கண்காணித்தப்படி இருந்தார்கள்.

91 -இல் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டதுமே தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் என்னைக் கைது செய்து சிறையில் அடைத்து விட்டார்கள். ராஜீவ் காந்தி கொலைச் சம்பவத்திற்கு முன் நான் சிறையிலிருந்து வெளியே வந்தேன். விடுதலைப் புலிகளுக்கு மருத்துவ உதவி செய்ததாக, வெடி மருந்துகள் வாங்கிக் கொடுத்ததாக மாற்றி மாற்றி வழக்குகள் போடப்பட்டன. இதில் தடாவில் ஏழு மாதங்கள் சிறையில் வைக்கப்பட்டேன். வேலூர் சிறையிலிருந்து சுரங்கம் வெட்டி புலிகள் தப்பித்த வழக்கில் சரியாக ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டேன்.
கர்நாடகாவில் எந்த கைதியாக இருந்தாலும் நீதிமன்றத்திற்குக் கைவிலங்குடன்தான் அழைத்துச் செல்வார்கள். என்னையும் அப்படி அழைத்துச் சென்ற போது அதற்காக நான் வாதாடிய பிறகு விலங்கிடுவதை கைவிட்டார்கள்.

*1967 க்கு முன்பு காங்கிரசுக்கு ஆதரவளிக்கிற நிலையிலிருந்து ஒரு மாற்றத்தை திராவிடக் கட்சியால் ஏற்படுத்த முடிந்ததற்குக் காரணம் திராவிட இயக்கச் செயல்பாட்டை ஏற்கத் தயாராகிவிட்ட மக்களின் மன நிலை. அம்மாதிரியான உணர்வு ரீதியான ஆதரவை இப்போதைய நிலையில் தமிழகம் மக்களிடம் உருவாக்கும் என்று நினைக்கிறீர்களா?
அப்படிப்பட்ட சூழல் நிச்சயம் வரும் என்று நம்புகிறோம். அப்படி உருவாகிற தமிழ்த் தேசியம் மக்களுடைய உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டு பிரதிபலிக்கிற தமிழ்த் தேசியமாக இருக்க வேண்டும். அது பார்ப்பன எதிர்ப்பையும் இந்துத்துவா எதிர்ப்பையும் உள்ளடக்கிய தேசியமாக முகிழ்க்கிற போது அதை ஏற்கக் கூடிய தேவையும் சூழலும் உருவாகிவிடும். தமிழ்த் தேசியத்தை ஏற்றுச் செயல்படுகிற குழுக்கள் அன்றைக்கு எந்த விதமான கோட்பாட்டை உள்ளடக்கித் திராவிடம் பேசப்பட்டதோ, அதன் உயிரான அம்சங்களை எடுத்துக் கொண்டு இன்றைக்குத் தமிழ்த் தேசியக் குழுக்களும் இயங்கினால் அதற்கான தேவையை ஏற்படுத்த முடியும்.

* பாரதிய ஜனதாவும், மதவாதமும் அகில இந்திய அளவில் காலூன்றிய நிலையில் தமிழகத்தில் சங்கராச்சாரியார் கைது செய்துபட்டதை இந்துத்துவாவிற்கு உருவான பின்னடைவாகச் சொல்ல முடியுமா?

தமிழகத்தைப் பொறுத்தவரை பொதுமக்கள் மத்தியிலேயே இந்துத்துவா என்கிற கருத்து படியவில்லை. அதனால்தான் சங்கராச்சாரியார் கைதுக்கு இங்கு எதிர்ப்பில்லை. பெரியார் இயக்கங்களின் மூலமாக உருவான உணர்வு இங்கு உள்ளுறையாக இருந்திருக்கிறது. வடநாட்டில் பேசப்படுகிற இந்துத்துவாவிற்கும் தமிழ்நாட்டில் பேசப்படுகிற இந்துத்துவாவிற்கும் குணாம்ச ரீதியாகவே வேறுபாடு உண்டு. இங்கே பெரியார் இயக்கங்கள் இயங்கிய தளத்திற்குள்தான் இந்துத்துவா சக்திகள் இயங்க முடியும். இங்கேயுள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டோரின் உணர்வுகளை இந்துத்துவாவிற்கு எப்படிப் பயன்படுத்தலாம் என்கிற நோக்கில்தான் அவை செயல்பட முடிகிறது. பெரியாரின் தாக்கம் இங்கு ஏதோ ஒரு அளவில் தடுப்புச் சுவராக இன்னும் இருக்கிறது. அதுதான் சங்கராச்சாரியார் கைது சம்பவத்திலும் செயல்பட்டிருக்கிறது.

*திராவிட இயக்கங்களின் பொதுவான செயல்பாடே ஒன்று நேரடியாக ஆட்சியில் பங்கேற்பது, அல்லது சமுதாய இயக்கமாக பெரும்பாலும் ஆளும் கட்சியை ஆதரித்த அல்லது விமர்சித்த நிலையில் இயங்குவது என்றுதான் இருந்து வருகிறது. பெரியார் திராவிடர் கழகத்தின் செயல்பாடு இதில் எப்படிப்பட்ட தனித்துவத்துடன் இருக்கும்?

பெரிய மாநாடு கூட்டி, ஆர்ப்பாட்டம் நடத்தி ஏற்படக்கூடிய ஆற்றலை  பெரியாரின் ஓர் அறிக்கையால் உண்டாக்க முடிந்தது. அவருக்கென்று ஒரு தனி ஆளுமை இருந்தது. அவரைப் பின்பற்றிய இயக்கங்களுக்கு இன்னும் பெரியாரின் கொள்கைதான் வலுவான பக்கபலமாக இருக்கிறது. நாங்கள் அவருடைய நிழல்கள்தான்.  தி.மு.க.வைக் கூட விமர்சனங்களுடன் தான் பெரியார் ஆதரித்தார். அ.தி.மு.க.வை சற்று வரம்பு மீறி ஆதரித்தது கி. வீரமணி தலைமையிலான திராவிடர் கழகம். அத்தகைய தவறை நாங்கள் எப்போதும் செய்ய மாட்டோம். அரசை ஆதரிப்பதோ எதிர்ப்பதோ மட்டும் எங்களுடைய வேலையில்லை.

பெரியாருக்கு அவருக்குரிய தியாகங்கள், செயல்பாட்டை வைத்துத் தனி மதிப்பு இருக்கிறது. மக்களிடம் ஒரு கருத்தை உருவாக்க முடிந்தது. எந்த ஆட்சியாக இருந்தாலும் நல்ல கருத்தை ஆதரித்தார். தப்பான கருத்தை நிராகரித்தார். மக்களைச் சார்ந்த அணுகுமுறையுடன்தான் அவருடைய செயல்பாடிருந்தது.

*திராவிட இயக்கங்கள் நீர்த்துப் போய்விட்டன என்கிற குற்றச்சாட்டுடன் திராவிட இயக்கங்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையில் தற்போது உருவாகியிருக்கிற இடைவெளியை தமிழ்த்தேசியம் பேசக்கூடிய அமைப்புகள் நிரப்ப முடியுமா?

சமூக நிர்ப்பந்தங்களும் தேவைகளும் உருவாகும் போதே  தற்போது  உண்டாகியிருக்கிற இடைவெளியை வெற்றிடத்தை நிரப்ப முடியும். இப்போது அந்தச் சூழ்நிலை இல்லை என்பதையும் நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். உண்மையான கொள்கை பேசுகிற இயக்கங்கள் தேர்தலில்  பங்கெடுத்தாலே அதற்குத் தனிக்கணக்கு உருவாகிவிடுகிறது. இதற்கிடையில் புதிய இயக்கம் பரிணமித்து வந்தால்தான் உண்டு என்பதுதான் இப்போதைய நிலை. திரைப்படமும், ஊடகங்களும் உருவாக்கக் கூடிய பிம்பங்களை, புனைவுகளை  மீறி இயங்க வேண்டிய பொறுப்பும் இன்றைக்கிருக்கிறது. ஆரோக்கியமான சமூகத்தின் அடித்தளத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பும் இங்குள்ள இயக்கங்களுக்கு இருக்கிறது.
இந்துத்துவா எப்போது இங்கு தீவிரப்பட்டதோ அப்போதே பெரியாரிய இயக்கங்களும், மார்க்சிய இயக்கங்களும்  இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் வந்து விட்டது. எதிரிகளின் செயல்பாடுகளைத் தடுக்க இணைந்து எதிர்வினையாற்றுவது இங்கு சமூக நிர்ப்பந்தமாயிருக்கிறது. பழைய அரசியல்வாதிகள் செய்த அதே தவறை திரும்பச் செய்துவிடக் கூடாது. முதல்வர் பதவிக்காக நிறைய பேர் தமிழ்த்திரைபடத்துறையில் காத்திருப்போர் பட்டியலில் காத்திருக்கிறார்கள். இவற்றையும் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.

சமூக விஞ்ஞான ரீதியாகச் சொன்னால், அடுத்த கட்டம், தமிழகத்தின் விழிப்புணர்ச்சிக்கும் சரியான அரசியலுக்குமான காலக்கட்டமாக இருக்கும். தமிழ்ச் சூழலுக்கேற்ற மாற்று நிச்சயம் உருவாகும். (தொகுப்பு: சுந்தரபுத்தன், புதியபார்வை, மார்ச் 16-31, 2005)

அம்பேத்கர் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்

 அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் என்று கூறுவது தவறு. அவர் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர் என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறினார்.

14.4.2011
வியாழக்கிழமை அம்பேத்கர் பிறந்த நாள் அன்று காலை 10 மணிக்கு சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு, சேலம் மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் சார்பாக, மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.

அன்று மாலை 7 மணிக்கு, சேலம் போஸ் மைதானத்தில், அம்பேத்கர் பிறந்த நாள் பொதுக் கூட்டம் நடை பெற்றது. சமர்பா குமரன் யோகராணி கலைக் குழுவினரின் எழுச்சிப் பாடல்களோடு துவங்கிய இப்பொதுக் கூட்டத்திற்கு, தமிழக ஒடுக்கப் பட்டோர் விடுதலை இயக்க மாவட்ட செயலாளர் இளமாறன் தலைமை ஏற்றார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் நிலவன், தமிழக மக்கள் உரிமை கழக ஒருங் கிணைப்புச் செயலர் வழக்கறிஞர் புகழேந்தி, த.ஒ.வி.இ. துணைப் பொதுச் செயலாளர் தமிழ் நேயன், அறிஞர் அம்பேத்கர் அமைப்புச் சாரா தொழிலாளர் முன்னேற்றச் சங்கத் தலைவர் அரங்க. செல்லத் துரை, தாய்மண் கல்வி பண்பாட்டு இயக்கம் வழக்கறிஞர் நெப்போலியன் ஆகியோர் உரை யாற்றினர்.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையின் சுருக்கம்:

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று அரசே அறிவித்தப் பின்னாலும், இன்று தமிழ்ப் புத்தாண்டு என்று அனைத்து தொலைக் காட்சி களிலும் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிற இந்த ஏப்ரல் 14 இல், அம்பேத்கரை நினைவுபடுத்தி பேசுவதற்காக அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் கூடியிருக்கிறோம். புரட்சியாளர் அம்பேத்கரை நாம் எப்படி புரிந்து கொள்ள வேண்டும்? நாம் ஏன் அவரை மற்றவர்களிடம் இருந்து பிரித்து வேறுபடுத்தி தனித்துவமாக பார்க்கிறோம் என்பதில்தான் அம்பேத்கருக்கு பிறந்த நாள் எடுப்பதன் பலனாக இருக்கும். புரட்சியாளர் அம்பேத்கர் பல சிறப்புகளை கொண்டவர். அவர் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்திருந்தாலும், வெளிநாடுகளுக்கு  சென்று படிக்கிற வாய்ப்பினைப் பெற்றார். அங்கு போய் ஆய்வு பட்டங்களையும், பல உயர் பட்டங் களையும் பெற்றார். தத்துவ துறையில், பொருளியல் துறையில், சட்டத் துறையில் பட்டங்களைப் பெற்று திரும்பி வந்தார் என்றால் பெயருக்கு பின்னால் போட்டுக் கொள்வதற்காக அல்ல.

இந்த இந்திய சமுதாயத்தை திருத்த பலர் வந்தார்கள். இந்த சமுதாயத்தில் இருக்கிற கேடுகளை நீக்க வேண்டும் என்பது அவர்களின் எண்ணமாக இருந்தது. ஆனால், இந்த சமுதாயத்தை மிகச் சரியாக புரிந்து கொண்டவர்கள் சிலர் மட்டுமே.  ஜோதிபா புலே தொடங்கி வைத்த புரட்சியை, சரியான பார்வையை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் போன்றவர்கள்தான் எடுத்துச் சென்றார்கள். மற்றவர்கள் எல்லாம் இருந்ததை மெல்ல சீர்திருத்தி, கொஞ்சம் மாற்றி, அதற்கு புதிய வண்ணத்தைப் பூசிவிட்டு செல்வதாக இருந்த காலத்தில், அடிப் படையையே மாற்றியாக வேண்டும் என்று எண்ணிய தலைவர், அதற்காக தனது முழு அறிவை, உழைப்பை, எல்லாவற்றையும் பயன்படுத்திய தலைவர், தத்துவத் துறையில் ஆய்வு செய்யப் போனவர், ஆய்வு மாணவராக இருந்த காலத்தில் ஒரு ஆய்வு கட்டுரை எழுதுகிறார். இந்திய சாதியினுடைய தோற்றம், அதன் செயல்பாடு ஆகியவற்றை ஆய்வு செய்து மாந்தவியல் துறையில் அந்த அறிக்கையை தருகிறார்.  அவருடைய இருபத்தி ஐந்தாம் வயதில், அவர் ஆற்றிய ஆய்வுரை இன்றைக்கு வரைக்கும் எல்லா விதத்திலும் அதை நாம் புரட்டிப் பார்க்கிற பொழுது, இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஆற்றப்பட்ட உரை. இந்த சமுதாயத்தின் கேடுகளாக, இந்த சமுதாயத்தின் நோயை தீர்ப்பதற்கான வழியாக அவர் சொன்னதைத் தான் நாம் மீள் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.

அவர் மகத் மாநாட்டில் பேசினார். பல இடங்களில் பல செய்திகளை பதிவு செய்தார் என்றாலும், லாகூர் மாநாட்டில் அவர்ஆற்ற இருந்த உரை (ஆற்றிய உரை அல்ல) சாதி ஒழிப்பு சங்கத்தார் என்ற அமைப்பைச் சார்ந்தவர்கள் இவரை தலைமை தாங்கி, தலைமை உரையாற்ற அழைக்கிறார்கள். இவர் உரையை எழுதி அனுப்புகிறார். அதை படித்து பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்துவிடுகிறார்கள். இந்த சாதி ஒழிப்புக்காக அவர் சொல்லுகிற வழிமுறைகளைப் பார்த்து அதிர்ச்சி அடைய காரணம்... இந்து சாஸ்திரங்களின் அதிகாரங்கள் தகர்க்கப்பட வேண்டும். அக மண முறை ஒழிக்கப்பட வேண்டும். இந்து மதம் தகர்ந்தாக வேண்டும். அர்ச்சகர் ஆகும் உரிமையை, உரிய பட்டயம் பெற்றால் அனைத்து சாதியினருக்கும் அளிக்க வேண்டும் என்பதையெல்லாம் வழிமுறையாக சொல் கிறார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் கொஞ்சம் மாற்றிக் கொள்ள சொல்லி கேட்கிறார்கள். அதில் ஒரு கால் புள்ளியை மாற்றவும் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். வேண்டாம் என்றால் திருப்பி அனுப்பி விடுங்கள்என்று அம்பேத்கர் கேட்கிறார். மாநாட்டையே ஒத்தி வைத்து விடுகிறார்கள்.
நாம் புரட்சியாளர் அம்பேத்கரை, அவரின் கொள்கைகளை புரிந்து கொள்ள வேண்டுமானால், ஒவ்வொருவரும் படிக்க வேண்டியது அந்த நூல். அவர் ஆற்ற இருந்த உரையை நூலாக வெளியிட்டார். நூல் வெளி வந்த இரண்டாம் மாதத்தில், அம்பேத்கரின் அனுமதியோடு தமிழில் பெரியார் வெளியிட்டார். அந்த நூல் தாங்கியிருந்த சிந்தனையைதான் பெரியாரும் கொண்டிருந்தார். அரசியல் நிலைபாடுகளில் இருவருக்கும் சிறு சிறு மாற்றங்கள் இருந்திருக்கலாம். அம்பேத்கர் ஒன்றுபட்ட இந்தியாவை விரும்பினார். பெரியார் தனித் தமிழ்நாடு பேசினார். இந்தி ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று அம்பேத்கர் விரும்பினார். பெரியார் இந்தி கூடாது என்று சொன்னார். அரசியல் நிலைகளில் அவரவர்களுக்கு இருந்த கருத்தின் அடிப்படையில் சொன்னார்கள். தாழ்த்தப்பட் டோரின் குடியிருப்பை பிற சாதியினர் வாழும் பகுதிகளில் நிறுவ வேண்டும் என்பது பெரியாரின் கருத்தாக இருந்தது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனிக் கிணறு வெட்ட காங்கிரஸ் நிதி அனுப்பியது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த பெரியார் வந்த நாற்பத்தி எட்டாயிரம் ரூபாயை திருப்பி அனுப்பினார். பொதுக் கிணற்றில் நீர் எடுக்க போராட வேண்டுமே தவிர தனிக் கிணறு கூடாது என்பது பெரியார் கருத்து. இன்னொரு பக்கம் அம்பேத்கர் தனிக் குடியிருப்பு வேண்டும் என போராட்டம் நடத்தினார். இப்படி பார்த்தால் அவர்களின் கோரிக்கைகளில் வேறுபாடுகள் போல தெரியும். ஆனால் அடி நீரோட்டமாய் இருவர் கருத்தும் சாதி ஒழிப்பே சமூக விடுதலை என்பதாகத் தான் இருந்தது.

பல பேர் படிக்கிறார்கள், பட்டம் பெறுகிறார்கள், தனி மனித வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள் கிறார்கள். ஆனால் புரட்சியாளர் அம்பேத்கர் தான் பெற்ற அறிவை, கல்வியை, பதவியை அனைத்தையும் சமூக மேம்பாட்டிற்காக, சமூக மாற்றத்திற்காக பயன்படுத்திய தலைவர். 1935 இல் மராட்டியத்தில், பம்பாய் மாகாணத்தில் சட்டமன்றத்திற்கு உறுப் பினராக நியமிக்கிறார்கள். நியமனம் பெற்று அவர் ஆற்றிய முதல் உரையிலேயே அங்கிருந்த நில உடமை யாளர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து பேசுகிறார். ஆங்கில அரசு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு செய்த துரோகங்கள் பற்றி பேசுகிறார். அவர் ஒரு நியமன உறுப்பினராக இருந்தும், நியமித்தவர்களையே விமர்சித்து பேசுகிறார். அவர் பதவி முக்கியம் எனக் கருதவில்லை. அவர் சமஸ்கிருதம் படித்தார், வேதங்களை படித்தார், புராணங்களை படித்தார், சாஸ்திரங்களை படித்தார். எதற்கு பயன்படுத்தினார்? இந்திய சமுதாயத்தில் சாதிய பிடியில் இருந்து மக்களை எப்படி காப்பாற்றுவது என்று அறிவதற்குப் படித்தார். மனுதர்மத்தைப் பற்றி அவர் செய்த ஆய்வு, யாருடனும் ஒப்பிட முடியாத அளவிற்குரிய ஆய்வாகும். மனுதர்ம சாஸ்திரத்திற்கு முன்னால் இருந்த காலத்தில் அனைவருக்கும் இருந்த உரிமைகளை எடுத்துக் காட்டினார். அவர் ஒவ்வொரு நாட்டின் சரித்திரங்களை படித்து, அடிமைத் தனத்தைவிட கொடுமையானது தீண்டாமைதான் என்பதை பல அடிமைத்தனத்தோடு ஒப்பிட்டு எழுதினார்.

அம்பேத்கர், வைஸ்ராய் கவுன்சில் உறுப்பினராக (இன்றைய மத்திய அமைச்சருக்கு இணையான பதவி) தேர்ந்தெடுக்கப்பட்டார். பதவி ஏற்பதற்கு முன்னால் நாக்பூரில் ஒரு மாநாட்டைக் கூட்டினார். கற்பி போராடு ஒன்று சேர் என்ற வாசகங்களை பேசியது அந்த மாநாட்டில்தான். பெண்கள் உரிமைக்காக தனியாக ஒரு மாநாடு, சமத்துவ தொண்டர் படை என்ற ஒரு மாநாடு, காந்தியோடு முரண்பட்டிருந்த அம்பேத்கர், இம்சைக்கு எதிரான சொல்தான் அகிம்சை. சாதியவாதிகளால் தாக்கப்பட்டால் திருப்பி தாக்கலாம் என்பதை தனது தொண்டர் களுக்கு சொன்னார்.

தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவெள்ளி என விளம்பரம் செய்து, அம்பேத்கரை தாழ்த்தப்பட்ட வர்களின் தலைவராக சுருக்கிவிட்டார்கள். தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவெள்ளி என்றோ அரசியல் சட்டத்தை எழுதியவர் என்றோ சொல்வது அவருக்கு பெருமை அல்ல. அவர் சொன்னார்... இந்து சமுதாயத்திற்கு வேதங்கள் தேவைபட்டது தாழ்த்தப் பட்ட வியாசனை வைத்துக் கொண்டார்கள். அவர்களுக்கு இதிகாசம் தேவைபட்டது. தாழ்த்தப்பட்ட வால்மீகியை வைத்து எழுதிக் கொண்டார்கள். இவர்களுக்கு அரசியல் சட்டம் தேவைப்பட்டது. என்னைப் பயன்படுத்திக் கொண்டார்கள். அப்படித்தான் சொன்னார். இவர்கள் எங்கு போனாலும் தாழ்த்தப்பட்ட மக்களை பயன்படுத்தித்தான் தங்கள் உயர்வை நிறுவிக் கொண்டார்கள் என்று சொன்னார். நான் இந்த சட்டத்திற்கு கட்டுப்பட்டவன். ஆனால் மதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சொன்னவர் அவர்தான். அவர் எழுதிய சட்டத்தைப் பற்றி. நான் வாடகை குதிரையாக பயன்படுத்தப்பட்டேன், என்னுடைய விருப்பத்திற்கு எதிராக பலவற்றை எழுதினேன் என்று சொன்னார். பேனாவை பிடித்தது மட்டும்தான் என் கை, அதை ஆட்டுவித்தவர்கள் பார்ப்பனர்கள் என்றும் சொன்னார். ஆந்திர பிரிவினை விவாதத்தின்போது பேசியவர்கள், ‘நீங்கள் தானே சட்டத்தை எழுதினீர்கள்என்று கேட்டனர்.  அவா சொன்னார்... ஆம் நான் தான் எழுதினேன். அதை எரிக்கும் முதல் ஆளாக நான்தான் இருக்கப் போகிறேன்என்று. அரசியல் வரைவு குழுவிற்குள் நுழைந்தபோது, என்னுடைய மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை தவிர, எனக்கு வேறு எந்த ஆசையும் இருக்கவில்லை என்று சொன்னார்.

பெட்டி திருட்டுப் போனாலும் சாவி என்னிடம் இருக்கிறது என்றானாம் நாயர்என்று மலையாள பழமொழி ஒன்று இருக்கிறது. அதுபோல அரசியல் சட்டத்திற்கு விளக்கம் சொல்பவர்கள் பார்ப்பனர் களாக இருக்கிறார்கள். ஆனால் எழுதப்பட்ட அரசியல் சட்டங்களில் பலவற்றை அம்பேத்கர் செய்தார். எட்டு மணி நேர வேலை என்பதை வலியுறுத்தி, பிரஞ்சு இந்தியாவில் பாண்டிச்சேரியில் மட்டும் ஒரு போராட்டம் நடந்திருக்கிறது. பிரிட்டிஷ் இந்தியாவில் யாரும் போராடவில்லை. அம்பேத்கர் தொழிலாளர் துறை அமைச்சராக இருந்தபோது, அதற்கான சட்டத்தை கொண்டு வந்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் செய்ததா அது? பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என்பதை கொண்டு வந்தவர் புரட்சியாளர் அம்பேத்கர் தான்.

அரசியல் சட்டம் எழுதப்பட்டபோது, தாழ்த்தப் பட்ட மக்களுக்கு மட்டும் தான் அம்பேத்கர் இட ஒதுக்கீட்டை வைத்தார். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வைக்கவில்லை என்று அவர் மீது ஒரு குற்றச்சாட்டு வைக்கிறார்கள். இதில் நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தாழ்த்தப் பட்டவர்களுக்கு மட்டும் தான் பட்டியல் இருந்தது. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பட்டியல் இல்லை. 1935 ஆம் ஆண்டு சட்டத்திற்கு முன்னாலேயே இரண்டு பட்டியலை தயாரித்து இருந்தார்கள். ஒன்று தீண்டாமைக்கு உட்பட்ட மக்கள், மற்றொன்று பொதுச் சமுதாயத்திலிருந்து விலகி, தனித்து வாழும் மக்கள். இந்த மக்களை பட்டியல் இன மக்கள் என தனியாக பிரிந்தார்கள். இந்த பட்டியலில் இருந்தவர்களுக்கான இடத்தை ஒதுக்கி அவரால் எழுத முடிந்தது. பட்டியலில் இல்லாத பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசியல் சட்டத்தில் 340 என்ற ஒரு பிரிவை எழுதினார். அரசு ஒரு ஆணையத்தை அமைத்து, சமுதாயத்திலும், கல்வியிலும் பின் தங்கியிருக்கும் மக்களின் பட்டியலை தயாரித்து, அவர்களின் மேம்பாட்டிற்கு செயல்பட வேண்டும் என்பதுதான் அந்த 340 ஆவது பிரிவு. எழுதியதோடு நிற்கவில்லை. அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளில் அவர் பதவியில் இருந்து விலகினார். பதவியில் இருந்து விலகுவதற்கு சில காரணங்களை கடிதத்தில் எழுதியிருந்தார். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஆணையம் அமைத்து, அவர்களின் மேம்பாட்டிற்கு செயல்பட வேண்டும் என்று சட்டம் இயற்றி ஒன்றரை ஆண்டுகள் ஆகியும், அதற்கான ஆணையம்கூட அமைக்கவில்லை என்பது, அவர் பதவி விலக எழுதிய காரணங்களில் ஒன்று. இப்படிப்பட்டவரைத்தான் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர் என்று சொல்கிறார்கள்.
இந்துமத புதிர்கள் என்று எழுதினார். இடஒதுக்கீடு என்பதைகூட, பதவி பெறும் நோக்கத்திற்காக அவர் சொல்லவில்லை. அனைத்து சமுதாய மக்களுக்கும், ஆட்சியிலும், அதிகாரங்களிலும் பங்கு இருக்க வேண்டும் என்பதுதான் அதற்கு அவர் கொண்ட பொருள். அவர் சொன்ன முறையும், அவருக்கு பின்னால் வந்தவர்கள் அதை எடுத்துக் கொண்ட முறையும் வெவ்வேறாக இருக்கிறது. நவீனத்துவத்தின் எதிரியாக இருந்தவர் காந்தி. அவருக்கு எதிர்ப்பைக் காட்டுவதற்கான அடையாளமாக, மிடுக்கான உடையோடும், பெருமித தோற்றத்தோடும் அம்பேத்கர் இருந்தார். அது அவர் விரும்பி ஏற்றுக் கொண்டதல்ல. ஆனால், அவருக்கு பின்னால் வந்த தலைவர்கள் அவரை போல் உடைகளை, காலணிகளை அணிவதுதான் அம்பேத்கரியம் என்று கருதிக் கொண்டார்கள். அவர் ஆட்சி அதிகாரத்தை, அரசியல் அதிகாரத்தை சமூக விடுதலைக்கு ஒரு வழியாக மட்டும் வைத்திருந்தார். இப்போது இவர்கள் அதை முடிந்த முடிவாக ஒரே இலட்சியமாக எடுத்துக் கொண்டுவிட்டார்கள். சமுதாயத்தின் மீது அவர் வைத்த பார்வை என்னவாக இருந்தது என்பதில் இருந்துதான் அம்பேத்கரை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்திய நாட்டின் விடுதலை பற்றி பேசுகிறபோது, இந்திய விடுதலைக்கு எதிரானவர்கள் என்ற குற்றச்சாட்டு பெரியார் மீதும், அம்பேத்கர் மீதும் உண்டு.

காங்கிரசை எப்போதும் எதிர்த்து வந்த அம்பேத்கர், காந்தியும், காங்கிரசும் தீண்டதகாதவர்களுக்கு செய்தது என்ன? என்று ஒரு புத்தகமாக எழுதி, இந்த மக்களுக்கு காந்தியும், காங்கிரசும் செய்த துரோகங்களை பட்டியலிடுகிறார். பல வீடுகளின் முன்னால் நாய்கள் இருக்கிறது எச்சரிக்கை என்ற பொருளில் பிவேர் ஆப் டாக்ஸ்என்று எழுதியிருப்பதைப்போல், அந்த புத்தகத்தின் இறுதி அத்தியாயத்திற்கு முந்தைய அத்தியாயத்தில், “பிவேர் ஆப் காந்திஎன்ற தலைப்பை அம்பேத்கர் எழுதியுள்ளார். தாழ்த்தப்பட்டவர் முன்னேற்றத்திற்காக பல முயற்சிகள் எடுத்ததில் ஒன்றாகத்தான், 1930 ஆம் ஆண்டு வட்டமேசை மாநாட்டிற்கு சென்று பல செய்திகளை எடுத்து வைத்தார். காங்கிரஸ் அப்போது கலந்து கொள்ளவில்லை. 1931 ஆம் ஆண்டு தான் காந்தி - இர்வின் ஒப்பந்தத்தின்படி வட்டமேசை மாநாட்டில் காந்தி கலந்து கொள்கிறார். (உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக் கோரி, இனி போராட்டம் நடத்த மாட்டோம் என்றும், வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்கிறேன் என்றும் போடப்பட்டதுதான் காந்தி-இர்வின் ஒப்பந்தம்”)

1930 ஆம் ஆண்டு வட்டமேசை மாநாட்டிற்கு செல்வதற்கு முன்னால் காந்தியை சந்தித்து பல விவாதங்களை செய்து, நீங்கள் ஏன் எப்போதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு துரோகமே செய்கிறீர்கள் என்று கேட்டு விட்டுத்தான் அம்பேத்கர் மாநாட்டிற்குப் போனார். அந்த மாநாட்டில் அம்பேத்கர் வைத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பிரதமர், தாழ்த்தப்பட்டவர்களுக்கு இரட்டை வாக்குரிமை தனித்தொகுதி உண்டு என அறிவித்தார். அப்படி கூடாது என்று போராடினார் காந்தி. இசுலாமியர்களுக்கும், சீக்கியர்களுக்கும் தனித் தொகுதியை ஏற்றுக் கொண்ட காந்தி, தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்குவது, இந்துக்களை பிரிக்கும் சூழ்ச்சி என்றார். அம்பேத்கர் கேட்டார்... இது வந்து தானா இந்துக்களை பிரிக்கப் போகிறது? நீங்கள் என்ன இணைத்தா வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? எப்போதும் எங்களை அரவணைத்துக் கொண்டா இருக்கிறீர்கள்? எப்போதும் பிரிந்திருக்கிற நாங்கள், இப்போதும் பிரிந்திருந்து நாங்கள் பெறப் போகும் மேம்பாட்டை ஏன் தடுக்கிறீர்கள்?” என்று.

சாகும் வரை உண்ணாவிரதம் என்று அறிவித்த காந்தியை பார்த்து அம்பேத்கர் கேட்டார்..... நீங்கள் எப்போதாவது உங்களின் உச்சபட்ச கோரிக்கையான இந்திய நாட்டின் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்திருக்கிறீர்களா? எங்கள் உரிமையை பறிப்பதற்காக உண்ணாவிரதம் இருக்கிறீர்களேஎன்று. ஏழு கோடி தாழ்த்தப்பட்ட மக்களின்  உரிமைகளைவிட, ஒரு காந்தியின் உயிர் பெரிதல்ல, உறுதியாக நில்லுங்கள்என்று. அப்போது வெளிநாட்டில் இருந்த பெரியார் அம்பேத்கருக்கு தந்தி கொடுத்தார். ஆனால், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்கள் நடத்தப்பட்டதால் உரிமைகளை விட்டுக் கொடுக்க நேர்ந்தது. தொடர்ச்சியாக காந்தியின் சூதான போக்கினை எதிர்த்து நின்ற தலைவர்கள் பெரியாரும் அம்பேத்கரும்.

இந்த சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ள மக்களின் உரிமையைப் பற்றி, அவர்களுக்கான மேம்பாட்டு திட்டங்களை ஆய்வு செய்வதற்காக வந்ததுதான் சைமன் கமிஷன். அதை வரவேற்றவர்கள் இந்தியா முழுவதும் இரண்டே தலைவர்கள் பெரியாரும் அம்பேத்கரும் தான். எல்லோரும் எதிர்த்தார்கள். பெரியார் ஆதரித்து வந்த நீதிக் கட்சியும் எதிர்த்தது. அப்போது பெரியார் எழுதினார்... சைமன் கமிஷனில் இந்தியர்கள் யாரையும் நியமிக்கவில்லை என்ற காரணத்தைச் சொன்னார்கள். மிண்டோ மார்லிக், மாண்டேகு சேம்ஸ்போர்டு வந்தபோதெல்லாம் கேட்காமல், இப்போது மட்டும் ஏன் கேட்கிறாய்? ரவுலட் சட்டத்தை ரவுலட் மட்டுமா எழுதினான்? குமாரசாமி சாஸ்திரியும் சேர்ந்துதானே எழுதினான். அதனால் என்ன பலன் கிடைத்தது? அவன் வீட்ல நான்கு பேருக்கு வேலை கிடைத்தது. நல்லது வந்தா மட்டும் நீ ஏற்றுக் கொள்கிறாய். கெட்டது வந்தா வாயை மூடிக் கொள்கிறாயே. நல்ல வேளையாக இந்தியர்கள் யாரையும் நியமிக்கவில்லை. நியமித்திருந்தால் பார்ப்பானை தான் நியமித்திருப்பான். அவன் எங்களுக்கு எதிராகத்தான் இருந்திருப்பான். எனவே இதை நான் வரவேற்கிறேன்என்று எழுதினார்.

இரண்டாம் உலகப் போரில், இந்தியப் படையை ஆங்கில அரசு போரில் ஈடுபடுத்தியது. இதனால் இந்தியர்களுக்கு என்ன லாபம் என்று கண்டித்து காந்தி அறிக்கை விட்டார். எப்போதும் காந்தியை எதிர்க்கும் அம்பேத்கர் அப்போது வரவேற்றார். காந்தியார் கேட்ட கேள்வியில் நியாயம் இருக்கிறது வரவேற்கிறேன், அதே சமயத்தில் காந்தியாரிடம் எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. இந்திய விடுதலைப் போரில் தாழ்த்தப்பட்டவர்களை ஈடுபடுத்துகிறீர்களே! அதனால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்ன லாபம் இருக்கிறது என்று கேட்டார். அதைத்தான் இன்றும் சொல்கிறோம். தமிழ் தேசியம் பேசுகிற பல பேர் சிக்கல் இல்லாத பிரச்சினை என்பதற்காக பேசிக் கொண்டிருக்கிறார்கள். சாதி இல்லை என்று பேசினால்தான் சிக்கல் வரும். தமிழ் தேசியம் என்று சொன்னால் எந்த சிக்கல்களும் இல்லை. இந்திய நாட்டு விடுதலையின்போது அம்பேத்கர் கேட்டார். தமிழ்நாட்டிற்கு விடுதலை விரும்புகிற நாம் கேட்கிறோம், சாதி ஒழிப்பு இல்லாத தமிழ்நாட்டு விடுதலையில் நமக்கென்ன இருக்கிறது? சாதி ஒழிப்பை இலக்காகக் கொண்ட, அதை நோக்கமாகக் கொண்ட, அதை போராட்டத்தோடு இணைத்துக் கொண்ட தமிழ்நாட்டு விடுதலைக்கு நாம் போராடுவோம்.

பெரியார் கேட்ட தனித் தமிழ்நாடு, சாதி ஒழிந்த, பாலியல், பொருளியல் பேதமொழிந்த - பொது உரிமை கொண்ட பொதுவுடைமை சமத்துவ சமுதாயத்தைப் படைக்க வேண்டும் - தடையாகவே விளங்கும் பார்ப்பன, பனியா கும்பலிடம் இருந்து பிரிந்து, வடவர் சுரண்டலற்ற நாட்டை உருவாக்க வேண்டும் என்பதே பெரியார் கேட்ட தனிநாடு. சாதி ஒழிப்பே உண்மை விடுதலை என்பதை ஏற்றுக் கொள்வோம் என்று கூறி விடைபெறுகிறேன்.